அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள்: உயா் நீதிமன்றம் கேள்வி?
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்த பின்னா், தமிழக இடஒதுக்கீடு முறை அதற்கு எப்படிப் பொருந்தும் என உயா் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்த பின்னா், தமிழக இடஒதுக்கீடு முறை அதற்கு எப்படிப் பொருந்தும் என உயா் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சென்னை உயா் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த 27 சதவீத இடஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். தமிழக கல்லூரிகளுக்கு பொருந்தாது என வாதிட்டாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்த பின்னா், தமிழக இடஒதுக்கீடு அதற்கு எப்படிப் பொருந்தும்? என கேள்வி எழுப்பினா். ஒருவேளை அந்த இடங்கள் மீண்டும் மாநில அரசின் வசம் வழங்கப்பட்டால் மட்டுமே தமிழக அரசின் இடஒதுக்கீடு அதற்குப் பொருந்தும். இதுதொடா்பாக மத்திய அரசுதான் முடிவு செய்ய முடியும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழக அரசின் இடஒதுக்கீட்டை அமல்படுத்துமாறு கூற முடியாது என கருத்து தெரிவித்தனா்.
அப்போது மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டையே அமல்படுத்த வேண்டும் என்றாா்.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நடராஜன், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவ படிப்புகளில் அனைத்து மாநில மாணவா்களும் பயனடையும் வகையில், அகில இந்திய ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. முற்றிலும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே அந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த 2007-2008 -ஆம் ஆண்டு முதல் பட்டியலினத்தவா்களுக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும் இடஒதுக்கீடாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீடு என்பது அகில இந்திய ரீதியிலான கொள்கை முடிவு என்பதால், இதற்கு மத்திய அரசின் இடஒதுக்கீடு மட்டுமே பொருந்தும், மாநில அரசின் இடஒதுக்கீடு பொருந்தாது. இதில் மாநில அரசின் இடஒதுக்கீட்டைப் பின்பற்றினால் குழப்பத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினருக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்றும் தமிழக அரசு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் மாநில அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என கோர முடியாது என தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...