திருவள்ளூரில் இடி, மின்னலுடன் கனமழை: 750 மி.மீ மழை பதிவு; 5 கறவை மாடுகள் பலி

திருவள்ளூர் பகுதியில் நள்ளிரவில் தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரையில் கனமழை பெய்தது.
திருவள்ளூரில் இடி மின்னலுடன் கனமழை: 750 மி.மீ மழை அளவு பதிவு; 5 கறவை மாடுகள் பலி
திருவள்ளூரில் இடி மின்னலுடன் கனமழை: 750 மி.மீ மழை அளவு பதிவு; 5 கறவை மாடுகள் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் நள்ளிரவில் தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரையில் கனமழை பெய்தது.

இதில் இடி மின்னல் தாக்கி 5 கறவை மாடுகள் வரையில் உயிரிழந்தது. மேலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

திருவள்ளூர் பகுதியில் திங்கள்கிழமை பகல் முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலையும் இருந்தது. இதேபோல், இரவிலும் வெக்கை நீடித்ததால், 12 மணிக்கு மேல்  நள்ளிரவில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. 

இதையடுத்து 12.30 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வீட்டிற்குள் இருந்தால் கொசுக்கடி தொல்லையாலும், இடி மின்னலும் பலமாக இருந்ததால் வெளியே வரமுடியாமலும் குழந்தைகளுடன் பெற்றோர்களும், முதியோர் மிகவும் அவதிக்குள்ளாகினர். 

இதேபோல் திருவள்ளூர், தாமரைபாக்கம், பூண்டி, செங்குன்றம், பூந்தமல்லி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.  

5 கறவை மாடுகள் சாவு: இந்த மழையால் திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே வயலூர் கிராமத்தில் நள்ளிரவில் இடி, மின்னல் பலமாக  தாக்கியதில் விவசாயியான தன்ராஜ், வசந்தா, சம்பத்குமார், செல்வக்குமார் ஆகியோருக்கு சொந்தமான 5 பசு மாடுகள் பலியாகின.

மழையளவு விவரம்: திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு - 
திருவள்ளூர்-135, தாமரைபாக்கம்-97, பூண்டி-91, பள்ளிப்பட்டு-90, சோழவரம்-68, பூந்தமல்லி-52, திருத்தணி-41,திருவாலங்காடு-35, ஜமீன் கொரட்டூர்-34, ஊத்துக்கோட்டை-30, கும்மிடிப்பூண்டி-25, பொன்னேரி-20, செங்குன்றம்-17, ஆர்.கே.பேட்டை-15 என மொத்தம் 750 மி.மீ, சராசரியாக 53.57 மி.மீட்டரும் பதிவாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் திருவள்ளூர், தாமரைபாக்கம், பூண்டி, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் அதிகளவு மழை பாதிவாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com