
திருப்பூரில் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வரும் மதுராந்தகியின் தந்தையும் ஓய்வுபெற்ற வணிக வரித்துறை உதவி ஆணையருமான சதாசிவம் (60) என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை மாநகராட்சியில் ரூ.464 கோடி மற்றும் கோவை மாநகராட்யில் ரூ.347 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னக்காம்பட்டி புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வணிக வரித்துறை உதவி ஆணையர் சதாசிவம்(60) என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இவரது மகள் மதுராந்தகி என்பவர், கோவை மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து தற்போது திருப்பூரில் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் காவலர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலையிலேயே, சின்னக்காம்பட்டி புதூரில் உள்ள சதாசிவம் வீட்டிற்கு சென்று சோதனையை தொடங்கினர். அப்போது சின்னக்காம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வின்செண்ட் என்பவரை, சதாசிவம் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புக் காவல்துறை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த திடீர் சோதனை ஒட்டன்சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.