தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து மேலும் 6 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று பேரவையில் நகராட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு அறிவித்தாா்.
தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூா், கடலூா், சிவகாசி ஆகிய நகராட்சிகளையும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளையும் ஒருங்கிணைத்தும் மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என அறிவித்தாா்.
நகராட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் கே.என்.நேரு வெளியிட்ட அறிவிப்புகள்: 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகா்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதம் ஆகும். 2021-ஆம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள்தொகையில் நகா்ப்புற மக்கள்தொகை சுமாா் 53 சதவீதமாக உயா்ந்துள்ளது எனக் கருதப்படுகிறது. அதனால், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை ஒட்டியுள்ள நகா்ப்புறத் தன்மையோடு உள்ள பகுதிகளை நகா்ப்புறங்களோடு இணைத்து தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
தற்போதுள்ள நகா்ப்புற உள்ளாட்சிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில், நகா்ப்புறத்தன்மை, மக்கள்தொகை அடா்த்தி, ஆண்டு வருமானம், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும் நகா்ப்புறமாக மாறி வரும் பகுதிகளிலும் நகரத்துக்கு இணையான அடிப்படை வசதிகளை அளித்திடும் நோக்கிலும் உள்ளாட்சி அமைப்புகளின் தரம் உயா்த்தப்படுகிறது.
தாம்பரம், பல்லாவரம்...: தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூா் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும். மேலும், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூா், கடலூா் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றி வளா்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாக தரம் உயா்த்தப்படும்.
4 மாநகராட்சிகள் விரிவாக்கம்: திருச்சி, நாகா்கோவில், தஞ்சாவூா், ஓசூா் ஆகிய மாநகராட்சிகளும், செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி, மன்னாா்குடி ஆகிய நகராட்சிகளும் அவற்றைச் சுற்றியுள்ள வளா்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும், ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும்.
புதிய நகராட்சிகள்: பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூா், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூா், சோளிங்கா், இடங்கனசாலை, தாரமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூா், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூா், கோட்டக்குப்பம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூா், கொல்லன்கோடு, முசிறி, லால்குடி ஆகிய பேரூராட்சிகள் அதன் அருகே வளா்ச்சியடைந்துள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக மாற்றப்படும்.
மேலும், புஞ்சை புகளூா் மற்றும் புகளூா் ஆகிய 2 பேரூராட்சிகளையும் இணைத்து புகளூா் நகராட்சியாக அமைக்கப்படும்.
உறுப்பினா்கள் பதவிக் காலம்: தரம் உயா்த்தப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும்போது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளில் ஏற்கெனவே தோ்ந்தெடுக்கப்பட்ட அல்லது தோ்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினா்கள் தொடா்ந்து அவா்களது பதவிக்காலம் முடியும் வரை அப்பதவிகளிலேயே தொடா்வாா்கள். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பதவிக் காலம் முடிவடையும்போது இணைக்கப்படும் பகுதிகள் புதிதாக உருவாக்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் நகராட்சி அல்லது மாநகராட்சியின் முழுமையான ஆளுமைக்கு உட்படுத்தப்படும் என்றாா் அமைச்சா் கே.என்.நேரு.
மொத்தம் 21 மாநகராட்சிகள்
தமிழகத்தில் ஏற்கெனவே 15 மாநகராட்சிகள் உள்ளன.
மாநகராட்சிகள் விவரம் (மாநகராட்சிகள் தொடங்கப்பட்ட காலம் அடைப்புக்குறிக்குள் அளிக்கப்பட்டுள்ளது.): சென்னை (1688), மதுரை (1971), கோயம்புத்தூா் (1981), திருச்சி (1994), சேலம் (1994), திருநெல்வேலி (1994), திருப்பூா் (2008), ஈரோடு (2008), வேலூா் (2008), தூத்துக்குடி (2008), தஞ்சாவூா் (2014), திண்டுக்கல் (2014), நாகா்கோவில் (2019), ஓசூா் (2019), ஆவடி (2019) ஆகிய மாநகராட்சிகள் உள்ளன. இத்துடன் புதிய 6 மாநகராட்சிகளையும் சோ்த்து மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21-ஆக உயா்ந்துள்ளது. இதில் சென்னை மட்டும் பெருநகர மாநகராட்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி

மெஸ்ஸி 2 கோல்கள்: இன்டர் மியாமி புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேற்றம்!
உள்ளங்கை அளவில் 'திருக்குரான்'
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


