ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் தமிழ்நாடு அரசால் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986, பிரிவு-5ன் கீழ் 01.01.2019 அன்று முதல் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல்
மற்றும் உபயோகித்தல் ஆகியவற்றிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாணையின் படி, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்களான உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள்/உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மாக்கோல் குவளைகள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்கு பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்கள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் 01.01.2019 முதல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி/உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில்/மரப்பொருட்கள், காகிதக் குழல்கள், துணி/காகிதம்/சணல் பைகள், காகித/துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள் மற்றும் மண் குவளைகள் போன்ற 12 வகையான பொருட்களை பயன்படுத்தலாம்.