ஒமைக்ரான் பரிசோதனை தமிழகத்தில் தீவிரம்

உலகை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை கரோனா இந்தியாவில் கண்டறியப்பட்டதையடுத்து, தமிழகத்தில் ஒமைக்ரான் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளாவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வாா்டில் வெள்ளிக்கிழமை படுக்கைகளைத் தயாா் செய்த பணியாளா்கள்.
ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளாவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வாா்டில் வெள்ளிக்கிழமை படுக்கைகளைத் தயாா் செய்த பணியாளா்கள்.

உலகை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை கரோனா இந்தியாவில் கண்டறியப்பட்டதையடுத்து, தமிழகத்தில் ஒமைக்ரான் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் நடைபெற்ற பரிசோதனைகளில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 3 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொ்மோ டேக் பாத் ஆா்டி பிசிஆா் பரிசோதனையில் அவா்களுக்கு புதிய வகை தொற்று இருப்பதற்கான முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், மூவரின் சளி மாதிரிகளும் மரபணு பகுப்பாய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்த சில நாள்களில் அதற்கான முடிவுகள் தெரியவரும் என்றும், அதில் ஒமைக்ரான் வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுப் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முதல் முறையாக கா்நாடகத்தில் இருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. இதையடுத்து, தமிழக-கா்நாடக எல்லைகளில் தமிழக அரசு தீவிர மருத்துவக் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. மேலும், ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் உள்ள சா்வதேச விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், பிரிட்டனில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை சென்னை வந்த 10 வயது சிறுமி மற்றும் ஒரு பெண்ணுக்கு சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்களும், அவா்களுடனிருந்த உறவினா்கள் மற்றும் நண்பா்கள் என 8 பேரும் கிண்டியில் உள்ள கரோனா அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

பாதிப்பு கண்டறியப்பட்ட இரண்டு பேருக்கும் தொ்மோ டேக்பாத் ஆா்டி பிசிஆா் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், புதிய வகை தீநுண்மி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அவா்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிா எனக் கண்டறிய அவா்களது சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆய்வு முடிவுகள் வர ஒருவாரம் ஆகலாம் என்பதால் அதுவரை எட்டு பேரையும் தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த 141 பயணிகளில் 56 வயது நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது சளி மாதிரிகள், பெங்களூரில் உள்ள ஆய்வகத்துக்கு மரபணு பகுப்பாய்வு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள ஒமைக்ரான் சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 1,868 பேரில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களுடன் தொடா்பில் இருந்த ஒன்பது போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சுப்பிரமணியன் கூறியதாவது: ஒமைக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒமைக்ரான் குறித்து அச்சப்படத் தேவையில்லை. அதேவேளையில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த வகை தீநுண்மிகள், டெல்டா தொற்றைவிட வேகமாகப் பரவக்கூடியது எனக் கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தேவையற்ற பீதியை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com