ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டம்: முதல்வர் துவக்கிவைத்தார்

முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் காய்கறி, ஊட்டச்சத்துத் தளைகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.
ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டம்: முதல்வர் துவக்கிவைத்தார்
Published on
Updated on
2 min read

முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் காய்கறி, ஊட்டச்சத்துத் தளைகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (6.12.2021) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டத்தின் கீழ் 225 ரூபாய் மானிய விலையில் மாடித் தோட்டத்  தளைகளையும், ஊரகப்பகுதிகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக 15 ரூபாய்க்கு 12 வகை காய்கறி விதைத்தளைகளையும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச் சத்துத்தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 25 ரூபாய்க்கு 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்துத் தளைகளையும் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழக வரலாற்றில் முதல்முறையாக, விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைத்துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை கடந்த 14.8.2021 அன்று தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிதிநிலை அறிக்கையில், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டத்தில் அன்றாடத் தேவைக்கான நஞ்சில்லா காய்கறிகளை மகளிர், தங்களது இல்லங்களிலேயே உற்பத்தி செய்வதற்கும், குழந்தைகள் தாவரங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கும், ஊரகப்பகுதிகளில் 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய 2 இலட்சம் விதைத்தளைகள் மானியத்தில் வழங்கப்படும் என்றும், நகர்ப்புரங்களில் 6 வகை காய்கறி விதைகள் கொண்ட 
1 இலட்சம் மாடித்தோட்டத்தளைகள் மானியத்தில் வழங்கப்படும் என்றும்,

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்துதளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 8 வகை செடிகள் கொண்ட 2 இலட்சம் ஊட்டச்சத்துதளைகள் மானியத்தில் வழங்கப்படும் என்றும்,  

காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை/ இடுபொருட்கள், காய்கறி குறைவாக சாகுபடி செய்யக்கூடிய 2 ஆயிரம் கிராமங்களில் 1250 ஹெக்டேர் பரப்பளவில் மண்வளத்தை மேம்படுத்த இடுபொருட்கள், 638 ஹெக்டேர் பரப்பளவில் பந்தல் அமைப்பதற்கான மானியம், 1000 ஹெக்டேர் பரப்பளவில் கீரை சாகுபடிக்கான மானியம் உள்ளிட்ட 95 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் செயல்படுத்த அறிவிக்கப்பட்டது. 

 அந்த அறிவிப்பிற்கிணங்க, முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டத்தின் கீழ், ரூ.6 கோடியே 75 லட்சம் செலவில், நகரப்பகுதிகளில் 900 ரூபாய் மதிப்புடைய  6 வகையான காய்கறி விதைகள், 6 எண்ணிக்கையிலான செடி வளர்க்கும் பைகள், 6 எண்ணிக்கையிலான இரண்டு கிலோ அளவிலான தென்னை நார்கட்டிகள், 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணி, 100 மி.லி. இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு ஆகியவை அடங்கிய மாடித்தோட்ட தளைகள் 225 ரூபாய் என்ற மானிய விலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டு மாடித்தோட்டத்தளைகள் வரை வழங்கப்படும்.

அதேபோன்று, ஊரகப்பகுதிகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக, ரூபாய் 90 இலட்சம் செலவில் 15 ரூபாய்க்கு கத்திரிக்காய், மிளகாய், வெண்டைக்காய், தக்காளி, அவரை, பீர்க்கன், புடலை, பாகல், சுரைக்காய், கொத்தவரை, சாம்பல்பூசணி, கீரைகள் ஆகிய 12 வகை காய்கறி விதைத்தளைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இக்காய்கறி விதைத்தளையினை இரண்டு தொகுப்புகள் வரை ஒருவர் பெற்றுக்கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், மூலிகை செடிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியுடைய பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்து பயன்பெற, ரூ.1 கோடியே 50 இலட்சம் செலவில், 25 ரூபாய்க்கு பப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, திப்பிலி, கற்பூரவல்லி, புதினா மற்றும் சோற்று கற்றாழை ஆகிய 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தளைகளை முதல்வர், பயனாளிகளுக்கு வழங்கினார். ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ஒரு தொகுப்பு வழங்கப்படும்.

இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் https://tnhorticulture.tn.gov.in/kit/என்ற இணையதள வாயிலாக விண்ணப்பித்து, சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மூலிகைகள் உட்கொள்ளும் வாய்ப்பினையும், ஊக்கம் தரும் பொழுதுபோக்கினையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். 

இந்நிகழ்ச்சியில், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., வேளாண்மை–உழவர்நலத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் ஆர்.பிருந்தா தேவி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com