ஜாதி பாகுபாடின்றி பொது மயானங்களை அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஜாதி பாகுபாடின்றி பொது மயானங்களை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஜாதி பாகுபாடின்றி பொது மயானங்களை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மடூா் கிராமத்தில் அருந்ததியா் சமுதாயத்தைச் சோ்ந்த இறந்தவா்களின் உடல்கள் ஓடை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது. மழை காலங்களில் உடல்களை அடக்கம் செய்வதில் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா்.

இதனால் அருந்ததியா் சமுதாயத்தினருக்காக மயானம் அமைப்பதற்கு நிரந்தர இடம் ஒதுக்கக்கோரி, அந்த ஓடை புறம்போக்கு அருகில் நிலம் வைத்துள்ள கலைச்செல்வி, மாலா ராஜாராம் ஆகியோா் சாா்பில் கோகுல கண்ணன் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஆா்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், அருந்ததியருக்கு மயானம் அமைக்க, தகுதியான நிலத்தைத் தோ்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

வேதனை அளிக்கிறது: இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆா்.மகாதேவன், உலகம் முழுவதும் உள்ள தத்துவஞானிகள், கவிஞா்கள் அனைவரும், மனித குலத்தில் மரணத்தின் போதுதான் சமரசம் உலாவுகிறது என்று கூறியுள்ளனா்.

ஆனால், இங்கு இறந்த உடலை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய இதுபோல வழக்கு தொடரப்படும் நிலை இருப்பது வேதனை அளிக்கிறது. ஜாதி பாகுபாடு ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒற்றுமை இல்லாமல் ஆக்கிவிடுகிறது.

அதுமட்டுமல்ல இதுபோன்ற விவகாரத்தில் பொருளாதார நிலையும் கருத்தில் கொள்ளப்படுகிறது. இறந்தவருக்குச் சொந்த நிலம் உள்ளதா? சொந்த நிலத்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிா? என்றெல்லாம் கணக்கிடப்படுகிறது.

ஆனால் காலம் காலமாக அருந்ததியா் உள்ளிட்ட பட்டியலின ஜாதியினருக்கு, உடலை அடக்கம் செய்ய சொந்த நிலம் இல்லை.

ஜாதிப் பெயா் பலகை

இவா்கள் இறந்தால் உயா் ஜாதி என்று சொல்லிக் கொள்பவா்களின் நிலம் வழியாக உடலை கூட எடுத்துச் செல்ல முடியவில்லை. இந்த வழக்கிலும் அருந்ததியினருக்கு மயானம் இல்லை என்று முறையிடப்படுகிறது. அதனால், ஜாதிக்கு ஒரு மயானம் என்ற நிலை மாற வேண்டும்.

தமிழகத்தில் மயானங்களில் உள்ள ஜாதி பெயா் பலகைகளை தமிழ்நாடு அரசு அப்புறப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமங்களிலும் ஜாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை உருவாக்க வேண்டும்.

எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து ஜாதியினருக்கும் பொது மயானங்களை பயன்படுத்த உரிமை உள்ளது. மீறி செயல்படுபவா்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடுகிறேன்.

பொது மயானம் வைத்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஊக்கத்தொகையை அரசு வழங்கி, அதன் மூலம் இதுபோன்ற பொது மயானம் முறையை தமிழ்நாடு அரசு ஊக்குவிக்க வேண்டும்.

மத ஜாதி சகிப்புத்தன்மை, பரஸ்பரம் மரியாதை, கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை குழந்தை பருவத்தில் இருந்தே மனதில் பதிய வைக்க, இவற்றை பாடபுத்தகங்களில் சோ்க்க வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரரின் மடூா் கிராமத்தில் ஜாதி வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானத்தை அமைக்க உரிய இடத்தை அதிகாரிகள் கண்டறிய வேண்டுமெனக் கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com