கோவை அருகே சிறுமி கொலை வழக்கில் கட்டிட தொழிலாளி கைது

கோவை அருகே சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட கட்டிட தொழிலாளியை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
கோவை அருகே சிறுமி கொலை வழக்கில் கட்டிட தொழிலாளி கைது
Published on
Updated on
2 min read

கோவை அருகே சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட கட்டிட தொழிலாளியை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

கோவை சரவணம்பட்டி அருகே சாலையோரம் சிறுமியின் சடலம் ஒன்று மூட்டையில் கட்டிய நிலையில் வியாழக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் இவர் அதே பகுதியை சேர்ந்த 31 வயது பெண் ஒருவரின் இளைய மகள் என்பது தெரியவந்தது.

சிறுமியின் தாயார் அதே பகுதியைச் சேர்ந்த 42 வயது கட்டிட தொழிலாளி முத்துக்குமார் என்பவருடன் தகாத உறவில் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 8 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் சிறுமியின் தாயார் முத்துக்குமார் உடன் தவறான தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், முத்துக்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் தாயாரிடம் இரண்டரை பவுன் தங்க நகையை கொடுத்துள்ளார். அதை திருப்பிக் கேட்டபோது சிறுமியின் தாயார் நகை திரும்பி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நகை திரும்ப வழங்குமாறு முத்துக்குமார் கேட்டபோது அது தனது இளைய மகளிடம் இருப்பதாகவும் அதை அவர் தர மறுப்பதாகவும் சிறுமியின் தாயார் கூறியுள்ளார். 

இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி சிறுமியை தொடர்பு கொண்ட முத்துக்குமார் அவரிடம் தனியாக பேச வேண்டும் என தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். இதை நம்பி முத்துக்குமாரின் வீட்டுக்குச் சென்ற சிறுமியிடம் தனது நகையை கேட்டு முத்துக்குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் தன்னிடம் நகை இல்லை எனவும் அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறிய போது அதை ஏற்க மறுத்த முத்துக்குமார் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதை எதிர்த்து சிறுமி போராடியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சிறுமியின் கை கால் மற்றும் வாய் பகுதியை கட்டி அவரை சாக்குமூட்டையில் வைத்து அருகில் இருந்த ஒரு ஓடையில் வீசி சென்று உள்ளார். 

மேலும் சிறுமியின் தாயாருடன் சேர்ந்து கடந்த 13-ஆம் தேதி முதல் சிறுமியை காணவில்லை என தேடியும் வந்துள்ளார். அதே நேரத்தில் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவும் உதவியுள்ளார். 

இந்நிலையில், சிறுமி, சிறுமியுடன் கடைசியாக தொடர்பில் இருந்த நபர்களின் பட்டியலை எடுத்து விசாரித்த போது, அதில் சிறுமி முத்துக்குமார் உடன் தொலைபேசியில் உரையாடியது தெரியவந்தது. இதனடிப்படையில் முத்துக்குமாரை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மேலும் விசாரித்ததில் அவர் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை தற்போது கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com