
மேட்டுப்பாளையம்: உதகை மலை ரயில் பாதையில் சேதமடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் முடிவு பெற்றதால் மலை ரயில் சேவை இன்று புதன்கிழமை முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு புகழ் பெற்ற மலை ரயில் சேவை நூறாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்து இயற்கை அழகை கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு மலை ரயில் பாதையில் விழுந்து தண்டவாளங்கள் சேதமடைந்தன.
மேலும்,தொடர் மழை காரணமாக, மலை ரயில் சேவை கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி முதல் டிசம்பர் 21 ஆம் தேதி வரை 2 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | மீண்டும் இரவு நேர ஊரடங்கு: மத்திய அரசு உத்தரவு
இந்நிலையில், மலை ரயில் பாதையில் சேதமடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் முடிவு பெற்றதால் மலை ரயில் சேவை இன்று புதன்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதையடுத்து பயணச்சீட்டுகளுக்கு முன்பதிவு தொடங்கியது.
சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் இன்று புதன்கிழமை காலை 7 மணியளவில் 4 பெட்டிகளுடன் உதகைக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது. பயணிகள் உற்சாகமாக ரயில் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பயணிகளின் ஆரவாரத்துடன் மலை இரயில் கிளம்பி சென்றது.
சுமார் இரு மாதங்களுக்கு பின்னர் மலை ரயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.