நகைக் கடன் தள்ளுபடி: தகுதியற்றவர்களுக்காக குரல் கொடுக்கும் எதிர்கட்சிகள் - அமைச்சர் இ.பெரியசாமி 

தமிழகத்தில் 10.18 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நகைக் கடன் தள்ளுபடியை, தகுதியற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் என எதிர்கட்சிகள் குரல் எழுப்புவதில் நியாமில்லை
அமைச்சர் இ.பெரியசாமி
அமைச்சர் இ.பெரியசாமி
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் 10.18 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நகைக் கடன் தள்ளுபடியை, தகுதியற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் என எதிர்கட்சிகள் குரல் எழுப்புவதில் நியாமில்லை என கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இ.பெரியசாமி மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் நகைக் கடன் தள்ளுப்படி வழங்கப்பட்டது தொடர்பாக எதிர்கட்சியினர், உண்மைக்கு மாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 

கடுமையான நிதி நெருக்கடி இருந்தும்கூட, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற வகையில் நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 
தமிழகம் முழுவதுமுள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.48 லட்சம் நகைக் கடன் பெறப்பட்டுள்ளது. இதில், 5 சவரன் நகைக்கு கூடுதலான கடன்களும் இடங்கும்.

ஆனால், அரசு தரப்பில் 5 சவரன் நகைக்கு குறைவாக உள்ள நகைக் கடன்கள் மட்டுமே தள்ளுப்படி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

நகைக் கடன் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், 5 சவரன் நகைக்கு கூடுதலாக அடகு வைக்கப்பட்டிருந்த பட்டியலில் ரூ.35 லட்சம் நகைக் கடன் இடம் பெற்றிருந்தன. 

அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறுவோரின் விவரங்களை பயன்படுத்தி சுமார் 2 லட்சம் பேர் கடன் பெற்றிருப்பது தெரிய வந்தது. அடகு நிறுவனம் நடத்துவோர் பல்வேறு பெயர்களில், பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு மிகாமல் கடன் பெற்றது, கவரிங் நகைகளை வைத்தும், பையில் நகையே இல்லாமலும் கடன் பெற்றது என பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக சுமார் ரூ.2 லட்சம் நகைக் கடன் கண்டறியப்பட்டன.

தணிக்கைக்கு பின், கூட்டுறவு சங்கங்களின் கடன் பெற்றிருந்த 22 லட்சம் பேரில், தகுதியான ஏழை மக்கள் 10.18 லட்சம் பேரின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

தகுதியான நபர்கள் விடுபட்டிருந்தால், அவர்களுக்கும் நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்படும். இதன் மூலம் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேறியுள்ளது.  

நகைக் கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற நோக்கத்திற்காக, திட்டமிட்டு கடன் பெற்ற பணக்காரர்கள் பயன்பெற முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், லட்சக்கணக்கில் ஊதியம் பெற்றுக் கொண்டு வருமானவரி செலுத்தும் அரசு ஊழியர்களும், கூட்டுறவுச் சங்க ஊழியர்களும் நகைக் கடன் தள்ளுபடி சலுகையின் மூலம் பயன் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது.

நகைக் கடன் தள்ளுபடி தொடர்பாக அவதூறு பரப்ப முயலும் எதிர்கட்சிகள், தகுதியற்றவர்களுக்கு சலுகை வழங்க சொல்வதை ஏற்க முடியாது என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com