கிரிஜா வைத்தியநாதன் நியமன வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சென்னை: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய அமைச்சரவையின் பணி நியமனக் குழு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி, தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால், மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா உள்ளிட்ட 3 பேரை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்திருந்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்ட பிரிவின்படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்படக் கூடிய நபருக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும்.
கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் இல்லை.
அவர் 3 ஆண்டுகள் 6 மாத காலம் மட்டுமே சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். எனவே அவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது. இதனைக் கருத்தில் கொண்டு அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக, மத்திய அரசு, கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...