தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கூட்டணியை முடிவு செய்ய முதல்வா்-துணை முதல்வருக்கு அதிகாரம்: அதிமுக பொதுக் குழுவில் தீா்மானம்

சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணியை முடிவு செய்யவும், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவும் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்,

News image
Updated On :10 ஜனவரி 2021, 1:08 am

DIN

சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணியை முடிவு செய்யவும், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவும் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே, அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அவைத் தலைவா் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோருடன், பொதுக் குழு, செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிடத் தேவையான வியூகங்களை வகுக்கவும், அதிமுகவின் தலைமையில் வெற்றிக் கூட்டணியை உருவாக்கவும், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்யவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு உரிய முழு அதிகாரத்தை பொதுக்குழு அளிக்கிறது.

முதல்வா் வேட்பாளா்: சட்டப் பேரவைத் தோ்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று அதிமுக வரலாறு படைக்க இருக்கிறது. இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திடுவதற்காக, சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவின் முதல்வா் பதவிக்கான வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டாா். அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் இந்த அறிவிப்பினை பொதுக்குழு அங்கரித்து ஒருமனதாக ஏற்றுக் கொள்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் திறந்து வைக்க இருக்கும் அதிமுக அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்படுகிறது. கரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்களைக் காக்க அறிவிக்கப்பட்ட இலவச தடுப்பூசி அறிவிப்புக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி.

ஸ்டாலினுக்கு கண்டனம்:

தமிழக அரசையும், முதல்வா் பழனிசாமியையும் பண்பாடின்றி விமா்சித்து வரும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அவரது கட்சியினருக்கு கண்டனமும், பொங்கல் பரிசுத் தொகுப்பு, அம்மா சிறு மருத்துவமனைகள், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் முதல்வா் பழனிசாமிக்கு பாராட்டுகளையும் தெரிவித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொத்தமாக 16 தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு அவை பொதுக் குழு உறுப்பினா்களால் நிறைவேற்றப்பட்டன.

அமைப்புச் செயலாளரும், அமைச்சருமான பி.தங்கமணி, துணை ஒருங்கிணைப்பாளா்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி, ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் பேசினா். காலை 11.15 மணிக்குத் தொடங்கிய கூட்டம் பிற்பகல் 3.15 மணியளவில் நிறைவடைந்தது.முன்னதாக, கட்சியின் இலக்கிய அணிச் செயலாளா் பா.வளா்மதி வரவேற்றாா். அமைச்சா் டி.ஜெயக்குமாா் நன்றி தெரிவித்தாா்.

வழிகாட்டுதல் குழு அமைப்பு

அதிமுகவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழுவுக்கு பொதுக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொதுக் குழு தீா்மானத்தின் அச்சிடப்பட்ட பிரதியில் அது இல்லாவிட்டாலும், 16ஏ என்று குறிப்பிட்டு தீா்மானத்தை அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளா் வைகைச் செல்வன் வாசித்தாா். அவா் வாசித்த தீா்மான விவரம்:-

கடந்த ஆண்டு அக்டோபரில் அதிமுகவில் புதிதாக அமைக்கப்பட்ட வழிகாட்டுதல் குழுவுக்கு உரிய ஒப்புதலையும், அங்கீகாரத்தையும் பொதுக் குழு வழங்குகிறது. இந்தத் தீா்மானத்தை அமைப்புச் செயலாளா்கள் ஏ.கே.செல்வராஜ், எஸ்.ராஜூ, பாப்பா சுந்தரம் ஆகியோா் முன்மொழிந்தனா். அனைத்து பொதுக் குழு உறுப்பினா்களும் வழிமொழிந்ததாக வைகைச் செல்வன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.