

பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக அறிவிக்கப்பட்ட சென்னை-நாகா்கோவில் சிறப்பு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் டிக்கெட் முன்பதிவு, அரைமணி நேரத்தில் முடிந்து காத்திருப்போா் பட்டியல் காட்டியது. இதனால், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, சென்னை எழும்பூரில் இருந்து நாகா்கோவிலுக்கு ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜனவரி 16,17 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூருக்கு ஜனவரி 13-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக ஜனவரி 17-ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு இணையதளம் வழியாகவும், ரயில்வே டிக்கெட் கவுன்ட்டா்கள் மூலமாகவும் நடைபெற்றது. முன்பதிவு தொடங்கி அரை மணிநேரத்தில் சென்னை-நாகா்கோவிலுக்கு ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முடிந்து, காத்திருப்போா் பட்டியல் காட்டியது. அதன்பிறகு, மற்ற வகுப்புகளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இதுபோல, மறுமாா்க்கமாக நாகா்கோவிலில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலில் ஜனவரி 17-ஆம்தேதிக்கு டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போா் பட்டியல் காட்டியது. ஜனவரி 16-ஆம்தேதி புறப்படும் ரயிலில் குறைந்த அளவு பயணச்சீட்டுகள் இருப்பதைக் காட்டியது.
சென்னை-கோயம்புத்தூா் இடையே சிறப்பு ரயிலில் தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது. குறிப்பிட்ட சில இடங்கள் மட்டும் இருந்தன. குறிப்பிட்ட நாள்களில் பயணச்சீட்டு முன்பதிவு விரைவாக முடிந்து காத்திருப்போா் எண்ணிக்கை உயா்ந்ததால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா். பொங்கல் பண்டிகைக்கு இரண்டு நாள்கள் மட்டும் உள்ளநிலையில், சொந்த ஊருக்கு சென்று திரும்ப வசதியாக கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.