எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள் காலமானார்

புகழ்பெற்ற எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள் (70) உடல் நலக் குறைவு காரணமாக செவ்வாய்க் கிழமை மாலை காலமானார்.
எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள்
எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள்

புகழ்பெற்ற எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள் (70) உடல் நலக் குறைவு காரணமாக செவ்வாய்க் கிழமை மாலை காலமானார்.

உடல் நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்றுவந்த அவர், தனது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் - காவனூரில் காலமானார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சிறப்பு அழைப்பாளராக இருந்தவர் சோலை சுந்தரபெருமாள். 

பள்ளி ஆசிரியராக இருந்த இவர் இடதுசாரி சிந்தனையாளர். வெண்மணிப் படுகொலையை முன்வைத்து இவர் எழுதிய 'செந்நெல்' நாவல்  மிகவும் பாராட்டுப் பெற்றது.

1989 இல் இவர் எழுதிய தலைமுறைகள் என்னும் முதல் சிறுகதை, சாலை பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைப் பற்றி வெளிவந்தது. இதுதவிர, உறங்க மறந்த கும்பகர்ணர்கள், ஒரே ஒரு ஊர்ல, நஞ்சை மனிதர்கள், தப்பாட்டம், பெருந்திணை, மரக்கால், தாண்டவபுரம், பால்கட்டு, எல்லை பிடாரி, வண்டல் உணவுகள் ஆகிய நாவல்களையும், மண் உருவங்கள், வண்டல், ஓராண்காணி, ஒரு ஊரும் சில மனிதர்களும், வட்டத்தை மீறி, மடையான்களும் சில காடைகளும், வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும், கப்பல்காரர் வீடு ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

மேலும், தெற்கே ஓர் இமயம் எனும் கவிதைத் தொகுப்பு, மனசு, குருமார்கள் ஆகிய குறுநாவல் தொகுப்பு, மருதநிலமும் சில பட்டாம் பூச்சிகளும், தமிழ் மண்ணில் திருமணம் ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். இவருடைய பல்வேறு படைப்புகள், விருதுகள் பெற்றவை. அத்துடன், பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் இவரின் படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

நாட்டுப்புற தெய்வங்கள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டவர். தமிழகத்தின் சிறந்த கலை இலக்கிய ஆளுமைகளில் ஒருவர் என இலக்கிய விமர்சகர்களால் பாராட்டப்படும் சோலை சுந்தரபெருமாளின் செந்நெல் நாவல், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இவருக்கு பத்மாவதி எனும் மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

உடல் நலக்குறைவால் இறந்த சோலை சுந்தரபெருமாளின் இறுதிச் சடங்கு புதன்கிழமை பிற்பகல் சொந்த ஊரான காவனூரில் நடைபெறுகிறது.

தொடர்புக்கு: 9442446869

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com