நெல்லையப்பர் கோயிலின் 4 வாயில்களையும் தினமும் திறக்க உத்தரவு: அமைச்சர்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருக்கோயிலின் 4 வாயில்களையும் தினமும் திறக்க வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டார்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை ஆய்வு செய்தார் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை ஆய்வு செய்தார் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருக்கோயிலின் 4 வாயில்களையும் தினமும் திறக்க வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டார்.

திருநெல்வேலியில் உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை ஆய்வு செய்த பின்பு அவர் மேலும் கூறியது:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழகத்தில் உள்ள தொன்மை மிகுந்த கோயில்களில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட கோயில்களில் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பழமைவாய்ந்த கோயில்களில் புதன்கிழமை ஆய்வு செய்யப்படுகிறது. அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருக்கோயிலில் கிழக்கு வாயில் மட்டுமே எப்போதும் திறந்திருப்பதாகவும், மற்ற மூன்று வாயில்களும் திறக்கப்படாததால் சிரமம் ஏற்படுவதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர். அதனால் உடனடியாக அனைத்து வாயில்களைத் திறக்கவும், கூடுதல் பணியாளர்களை தினக்கூலி அடிப்படையில் நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இக் கோயிலின் மூலவருக்கு தைலக்காப்பு சில ஆண்டுகளாக செய்யப்படவில்லை. அதனை மீண்டும் செய்வதோடு, கோயிலில் உள்ள சிலைகளை பராமரித்து புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளித்தேரை சீரமைத்து தேரோட்டம் நடத்தப்படும். காந்திமதி யானைக்கு மாதம் ஒருமுறை பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது மாதம் இருமுறை பரிசோதனை செய்து சத்துமிகுந்த உணவுப்பொருள்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காந்திமதியம்மன் சன்னதியில் உள்ள பிரகார மண்டபத்தில் புனரமைப்பு பணிகளைச் செய்ய தொல்லியல் துறையின் பரிந்துரை விரைவில் பெறப்பட்டு உபயதாரர்கள் உதவியுடன் பணி முடிக்கப்படும். தெப்பக்குளத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்து சமயஅறநிலையத்துறை கோயில்களில் திருப்பணிகள் செய்யவும், குடமுழுக்கு நடத்தவும் பணிகளை விரைவுப்படுத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய ஏதுவாக இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் "குறைகளை பதிவிடுக' என்ற பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.  பக்தர்கள் தங்களது பெயர், விவரம் உள்ளிட்டவற்றை அளித்து குறைகளை மின்னணு முறையில் தெரிவிக்கலாம். இதுதவிர 044-28339999 என்ற தொலைபேசி எண்ணிலும் தகவலைக் கூறினால் அந்தந்தமாவட்ட இணை ஆணையர்கள் மூலம் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

ஆய்வின்போது பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலருமான மு.அப்துல்வஹாப், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. லெட்சுமணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com