திமுக ஆட்சியில் நெல் கொள்முதல் செய்த விவரத்தை அறியாமல்தான் ஈபிஎஸ் பேசுகிறாரா?: அமைச்சர் சக்கரபாணி

திமுக ஆட்சியில் நெல் கொள்முதல் செய்த விவரத்தை அறியாமல்தான் ஈபிஎஸ் பேசுகிறாரா? என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளார்.  
திமுக ஆட்சியில் நெல் கொள்முதல் செய்த விவரத்தை அறியாமல்தான் ஈபிஎஸ் பேசுகிறாரா?: அமைச்சர் சக்கரபாணி

திமுக ஆட்சியில் நெல் கொள்முதல் செய்த விவரத்தை அறியாமல்தான் ஈபிஎஸ் பேசுகிறாரா? என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பொத்தாம் பொதுவாக டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பற்றி குறைகூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தங்களுக்கு கமிஷன் கொடுக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்குவதாகவும் அதற்காக அதிகாரிகளை மிரட்டுவதாகவும் தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் இது போன்ற நிலை இருப்பதாகவும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உப்பிலியாபுரம் பகுதிகளில் தங்க நகர், பி.மேட்டூர், வைரிசெட்டிபாளையம், எரகுடி வடக்கு மற்றும் ஆலத்துடையான்பட்டி ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து, அங்கு விவசாயிகள் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகளைக் கொண்டு வந்துள்ள நிலையில் ஆளும் கட்சியினரின் அரசியல் தலையீடு காரணமாக நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுவதாகவும் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளுடன் நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலை உள்ளது என்றும் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையைப் பார்த்தாலே கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்று அவர் கூறியது போலுள்ளது என்பது அனைவருக்கும், குறிப்பாக உப்பிலியாபுரம் பகுதி விவசாயிகளுக்கும் நன்றாகத் தெரியும். ‘கமிஷன்’ என்ற தனக்குப் பிடித்தமான சொல்லைப் பயன்படுத்தியிருக்கும் முன்னாள் முதலமைச்சரும் ‘விவசாயி’ யுமான அவரின் ஆட்சியில் உப்பிலியாபுரம் பகுதியில் 30.06.2020 அன்று செயல்பட்ட கொள்முதல் நிலையங்கள் 5. ஆனால் இப்போது செயல்படும் கொள்முதல் நிலையங்கள் 12. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அவரது ஆட்சிக்காலத்தில் 01.05.2020 முதல் 30.06.2020 வரை சென்ற ஆண்டு கொள்முதல் செய்த அளவு 2446 மெட்ரிக் டன்கள். ஆனால் இந்த ஆண்டு 01.05.2021 முதல் 30.06.2021 வரை 8065 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் 01.05.2020 முதல் 30.06.2020 வரை 2,39,534 மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு 01.05.2021 முதல் 30.06.2021 வரை 2,97,210 மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தபின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மூன்று மடங்குக்கு மேலான அளவிலும், டெல்டா மாவட்டங்களில் 24% க்கு மேலும் அதிகம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள விவரத்தை அவர் அறியாமல் தான் பேசுகிறாரா? நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யலாம் என்று அவருடைய ஆட்சியிலேயே சுற்றறிக்கை அனுப்பிவிட்டு இப்போது ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள் என்று அறிக்கை விடுகிறார். அவரின் ஆட்சிக் காலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் எருக்கூர் என்ற ஊரில் நெல்லைச் சேமித்து வைக்க 50000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ‘சைலோ’க்கள் அவரால் 02.07.2018 அன்று தொடங்கி வைக்கப்பட்டு இன்றளவும் முழுமையாகச் செயல்படாமல் உள்ளதையும் அதைச் செயல்படுத்த இன்னும் 14 கோடி ரூபாய் தேவைப்படும் என்பதையும் அவர் அறிவாரா? அதுமட்டுமல்ல ஆண்டொன்றுக்கு 27500 டன் அரைக்கும் திறன் கொண்ட அரிசி அரவை ஆலைகளுக்கு 50000 டன் கொள்ளளவு கொண்ட ‘சைலோ’க்கள் கட்டியதை என்னவென்று சொல்வது?
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் புகார் சொல்லாமல் தீர விசாரித்து எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது என்று குறிப்பிட்டுச் சொன்னால் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இயங்கும் அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்பதை அவருக்கு வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com