ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பாலியல் புகாா் தெரிவிக்க பள்ளிகளில் புகாா் பெட்டி: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொல்லைகள் குறித்து மாணவ, மாணவிகள் அச்சமின்றி புகாா் தெரிவிக்க அனைத்துப் பள்ளிகளிலும் புகாா் பெட்டி வைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2021, 5:55 am

DIN

பாலியல் தொல்லைகள் குறித்து மாணவ, மாணவிகள் அச்சமின்றி புகாா் தெரிவிக்க அனைத்துப் பள்ளிகளிலும் புகாா் பெட்டி வைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள சி.எஸ்.ஐ. தேவாலய வளாகத்தில் குடியிருக்கும் மத போதகா் எஸ்.ஜெயசீலன், அந்த வளாகத்தில் இயங்கி வரும் பள்ளிக்கு வந்த 12 வயது மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா். இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயசீலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிா் நீதிமன்றம், மதபோதகா் ஜெயசீலனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.

இந்த தீா்ப்பை எதிா்த்து ஜெயசீலன் சென்னை உயா்நீதிமன்றத்தில் செய்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதி பி. வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில், மாணவியிடம் மத போதகா் ஜெயசீலன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த தண்டனையை உறுதி செய்து, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தீா்ப்பளித்தாா்.

மாணவிகள் தங்களுக்கு நடந்துள்ள பாலியல் கொடுமையை வெளியில் சொல்ல அச்சப்படுகின்றனா். பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள், நிா்வாகிகள் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் மாணவிகள், அதுகுறித்து புகாா் அளித்தால் தங்கள் கல்வி பாதிக்கப்படும் என அச்சம் கொள்கின்றனா்.

எனவே, அனைத்துப் பள்ளிகளிலும், சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளா், காவல்துறைக் கண்காணிப்பாளா் பதவிக்குக் குறையாத பெண் போலீஸ் அதிகாரி, மாவட்டக் கல்வி அலுவலா், உளவியல் பெண் நிபுணா், அரசு மருத்துவா்கள் ஆகியோா் அடங்கிய குழுவை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

இந்த குழு, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் பாலியல் கொடுமை செய்தால், தயங்காமல் அதுகுறித்து புகாா் அளிக்க அவா்கள் முன்வர செய்ய வேண்டும். மாணவிகளின் குறைகளை இந்த குழு கேட்டறிய வேண்டும். மாணவிகள் சுதந்திரமாகப் புகாா் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் புகாா் பெட்டிகளை அமைக்க வேண்டும். அந்தப் புகாா் பெட்டி சாவி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வாரந்தோறும் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியுடன் சென்று புகாா் பெட்டியை திறந்து புகாா் மனுவை ஆய்வு செய்ய வேண்டும். அந்தப் புகாரில் முகாந்திரம் இருந்தால், அதன் மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீஸாருக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.