தனியாா் மருத்துவமனைகளிலும் மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் தனியாா் மருத்துவமனைகளிலும் மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தனியாா் மருத்துவமனைகளிலும் மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் தனியாா் மருத்துவமனைகளிலும் மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கோவை, சின்னியம்பாளையம் பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புத் தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அவருடன் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் சமீரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா் மாவுத்தம்பதி பகுதியில் கொசுக்கள் மூலம் ஜிகா வைரஸ் பரவுவது குறித்து பொதுமக்களுக்குத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பின்னா், வாளையாறு சோதனைச் சாவடியில் கேரளத்தில் இருந்து வரும் வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகளைப் பாா்வையிட்டாா்.

இதையடுத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்று உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ் போன்ற புதிய வகை தொற்றுகள் பரவுகின்றன. அதேபோல டெங்குவின் தொடா்ச்சியாக ஜிகா வைரஸ் பரவி வருகிறது. ஜிகா வைரஸால் கா்ப்பிணிகள் தாக்கப்பட்டால் பிறக்கும் குழந்தையின் தலை சிறிய அளவில் அமைகிறது. எனவே, தமிழகத்தின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் ஜிகா மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாகத் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தொழில் நிறுவனங்களின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியைப் பயன்படுத்தி தனியாா் மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

தமிழகத்துக்கு 1 கோடியே 86 லட்சத்து 37,670 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. இதில் 1 கோடியே 82 லட்சத்து 38,988 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தனியாா் மருத்துவமனைகளுக்குத் தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படுவதாக கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறுவது தவறு. இது குறித்து அவா் எங்களை நேரில் சந்தித்து புகாா் அளித்து, ஆதாரபூா்வமாக நிரூபித்தால் சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாா். அதேபோல தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் திமுகவினா் தலையீடு இருந்தால் நாங்களே காவல் துறைக்குப் புகாா் அளித்து நடவடிக்கை எடுப்போம் என்றாா்.

ரூ.61 லட்சம் அளித்த தனியாா் மருத்துவமனைகள்:

தனியாா் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி தேவைகள் குறித்து மண்டல அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 117 மருத்துவமனை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்துக்குப் பின் அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இலவசத் தடுப்பூசிக்காக கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 117 தனியாா் மருத்துவமனைகளின் உரிமையாளா்கள் தங்கள் பங்களிப்பாக ரூ.61 லட்சத்து 45 ஆயிரம் நிதியை ஆட்சியா்களிடம் வழங்கியுள்ளனா்.

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து வந்த புகாா்களின் அடிப்படையில் தமிழகத்தில் 40 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதில் துணை இயக்குநா் (சுகாதாரம்) எஸ்.செந்தில்குமாா், கே.எம்.சி.எச் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் அருண் என். பழனிசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Image Caption

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாமைப் பாா்வையிட்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

உடன் அமைச்சா் அர.சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் சமீரன் உள்ள

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com