தமிழகமெங்கும் நடைபெறும் கரோனா தடுப்புப் பணிகளைத் தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு செய்துவரும் முதல்வர், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் முழு உடல் கவசம் அணிந்து கரோனா சிகிச்சைப் பிரிவிற்கே நேரில் சென்று, கரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்து, அங்கு பணிபுரியும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் ஊக்கப்படுத்தினார்கள்.
முதல்வரின் சிறப்பான முயற்சிகளினால், கோவிட் பெருந்தொற்றுப் பரவலுக்கெதிரான போரில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும், புலம்பெயர் தமிழர் சமுதாயத்தினரும் ஊக்கத்துடன் ஒன்று திரண்டுள்ளனர். பெருநிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள், வணிகர் சங்கங்கள், அரசுசாரா தொண்டமைப்புகள், அரசியல் கட்சிகள், கலைத்துறையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்வதில் இந்த அரசுடன் தோளோடு தோள் நின்று செயல்படுகின்றனர். இதுவரை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 335.01 கோடி ரூபாய் நிதியுதவி பல்வேறு தரப்பிலிருந்து குவிந்துள்ளது. இத்தொகையில், 141.10 கோடி ரூபாய் உடனடியாகவும், வெளிப்படையாகவும், உயிர்காக்கும் மருந்துகளையும், கருவிகளையும் கொள்முதல் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்குவதற்காக 50 கோடி ரூபாயும், கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு 50 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.