சுங்கச்சாவடி கட்டண விவகாரம்: இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணைய மனு தள்ளுபடி

மதுரவாயல் -  வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
சுங்கச்சாவடி கட்டண விவகாரம்: இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணைய மனு தள்ளுபடி
சுங்கச்சாவடி கட்டண விவகாரம்: இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணைய மனு தள்ளுபடி

மதுரவாயல் -  வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

சென்னை மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மோசமான நிலையில் உள்ளதாகவும், அந்த சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும் நீதிபதி எம்.சத்தியநாராயணன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, முறையாக பராமரிக்கப்படாததால் மதுரவாயல் -  வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது. 

அப்போது, இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில், நெடுஞ்சாலை பணிகள் முடிக்கவிட்டால் 75 சதவீதம் கட்டணம் வசூலிக்கலாம் எனச் சுற்றறிக்கை உள்ளது. எனவே அதன்படி கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும்.மேலும் 50 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவால் தினமும் ரூ.16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள்  நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இந்த சாலையில் பயணம் செய்துள்ளாரா என கேள்வி எழுப்பினார். அண்மையில் இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணித்த நீதிபதி ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார். தில்லியிலிருந்து மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை செயலாளரை இந்த சாலையில் வேலூர் பொற்கோயிலுக்குப் பயணித்து  அறிக்கை தாக்கல் செய்யக்  கூறுங்கள், என மத்திய அரசு தரப்பு வழக்குரைஞரிடம் தெரிவித்த நீதிபதிகள், 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com