அலட்சியம் வேண்டாம்; 2016-ஆம் ஆண்டைப் போல நடந்துவிடக் கூடாது: ஸ்டாலின் அறிவுரை

2016-ஆம் ஆண்டைப் போல நடந்துவிடக் கூடாது, கருத்துக் கணிப்புகளினால் அலட்சியம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அலட்சியம் வேண்டாம்; 2016-ஆம் ஆண்டைப் போல நடந்துவிடக் கூடாது: ஸ்டாலின் அறிவுரை
அலட்சியம் வேண்டாம்; 2016-ஆம் ஆண்டைப் போல நடந்துவிடக் கூடாது: ஸ்டாலின் அறிவுரை
Published on
Updated on
2 min read

சென்னை: 2016-ஆம் ஆண்டைப் போல நடந்துவிடக் கூடாது, கருத்துக் கணிப்புகளினால் அலட்சியம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தேர்தல் களத்தில் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும், எல்லா திசைகளிலிருந்தும் நம்பிக்கை ஊட்டும் நல்ல செய்திகளே நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. தி.மு.கழகத்திற்குப் பெரும் ஆதரவான மக்களின் மனநிலை, பேரலையாக எழுந்து உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. 

பத்தாண்டுகாலம் ஆட்சியில் இருந்து தமிழகத்தை அனைத்து முனைகளிலும் பாழ்படுத்திய அ.தி.மு.க.வை அந்தப் பேரலை சுருட்டி தூர எறிந்துவிடும் என்பதைத் தமிழக மக்கள் எல்லா இடங்களிலும் நாள்தோறும் திமுகவுக்கு அளித்து வரும் கணிசமான ஆதரவின் வாயிலாக உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஊடகங்களில் - பத்திரிகைகளில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் மகத்தான வெற்றிக்குக் கட்டியம் கூறுகின்றன. இவையெல்லாம் நமக்கு, நமது உழைப்புக்கு, நாம் கொண்டிருக்கும் கோட்பாடுகளுக்கு, ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும் அதே வேளையில், முன்பைவிட நாம் அதிகமான கவனத்துடன் உழைக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வையும் இணைத்தே  ஏற்படுத்துகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

கருத்துக்கணிப்புகள் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்தாலும், எதிராக இருந்தாலும், அதனை மட்டுமே நம்பி சார்ந்திருக்காமல், முன்னெப்போதும் போல களப்பணியாற்றுவதே நம் கடமை என்பதை தலைவர் கருணாநிதி அடிக்கடி நினைவூட்டுவார். மக்கள்தான் வெற்றியைத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்களே என்ற அதீத எண்ணம் மனதில் கடுகளவு குடியேறினாலும், அது களத்தில் மலையளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

தேர்தல் என்பது ஒவ்வொரு வாக்குக்கும் உள்ள ஜனநாயக வலிமையை நமக்கு உணர்த்துவதாகும். வலிமை மிகுந்த அந்த வாக்குகளை மக்கள் நமக்குத் தருவதற்கு ஆயத்தமாக - ஆர்வமாக இருக்கிறார்கள் என்றாலும், அவற்றை வாக்குச்சாவடிக்குக் கொண்டு வந்து சேர்க்கிற நாள் வரையிலும் நம் உழைப்பில் - கவனத்தில் ஒரு சிறு தொய்வும் ஏற்பட்டுவிடக் கூடாது.

தலைவர் கருணாநிதி 6-ஆவது முறையாக முதலமைச்சராக அமர வைக்கும் வாய்ப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போது வெறும் 1.1% வாக்குகள் வித்தியாசத்தில்தான் கை நழுவிப் போனது. எனவே, கருத்துக் கணிப்புகள் தருகிற உற்சாகத்தைவிட, உழைப்பின் மூலம் சேகரித்துச் செலுத்தப்படும் ஒவ்வொரு வாக்கும்தான் உண்மையான உற்சாகத்தை, ஊக்கத்தை வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ஆம் தேதியன்று வழங்கிடும். அதற்கேற்ப அயராது, எதையும் அலட்சியம் செய்யாது பணியாற்றிட வேண்டும்.

வெற்றிச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்வரை, நம் உன்னதமான உழைப்புக்கு ஓய்வு என்பதே கிடையாது; நம் கண்களுக்கு உறக்கம் கிடையாது; நம் சிந்தனையில்-செயல்பாட்டில் சிறிதும் சோர்வு கிடையாது.

கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், வாக்குகளே வெற்றியைத் தரும். சிறு துளிகள் பெருகிச் சேர்ந்து கடலாவது போல, ஒவ்வொரு வாக்கும் கவனமாகச்  சேகரிக்கப்படும்போது, வெற்றியின் அளவு வரலாறு காணாத வகையில் உயர்ந்திடும். அதனால், ஒவ்வொரு நாளும்  வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரியுங்கள். ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுங்கள்.

அலட்சியம் வேண்டாம்; ஒதுங்கி நிற்காதீர்; முன்னின்று செயல்படுங்கள். தோழமை சக்திகளுக்குத் தோள் கொடுத்திடுங்கள். உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் பாடுபட்டு கண்டுள்ள விளைச்சலில், எந்தவித சேதாரமும் எக்காரணம் கொண்டும் இடையில் ஏற்பட்டுவிட அனுமதியாமல், முழு வெற்றியை அறுவடை செய்வதற்கு, கவனம் சிதறாமல் - கருத்தொன்றி  உழைத்திடுங்கள் என்று திமுக தொண்டர்களை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com