எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை: கே.எஸ்.அழகிரி, வைகோ கண்டனம்

எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கு கே.எஸ்.அழகிரி, வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கு கே.எஸ்.அழகிரி, வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில், திமுக வேட்பாளர் எ.வ. வேலுவுக்குச் சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில், எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
சுமார் 20 வாகனங்களில் வந்த வருமான வரித்துறையினர் இந்த சோதனைகளில் ஈடுபட்டு வருவதாகவும், மு.க. ஸ்டாலின் தங்கியிருந்த எ.வ. வேலுவுக்குச் சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெறுகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை சகித்துக் கொள்ள முடியாத மத்திய பா.ஜ.க. அரசு, வருமான வரித்துறையை ஏவிவிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 
வருமான வரி சோதனை என்ற போர்வையில், தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுகிறவர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை செய்வது தொடர் கதையாகி வருகிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

மதிமுக பொதுச்செயலர் வைகோ: திருவண்ணாமலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கின்ற நிலையில் அவர் தங்கி இருந்த அறை உள்ளிட்ட தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திருவண்ணாமலை எ.வ.வேலு அவர்களின் வீடு, அலுவலகம், கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம், உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது வன்மையான கண்டனத்துக்குரியது.

மத்திய பா.ஜ.க. அரசின் இத்தகைய மிரட்டல்களால் ஒருபோதும் தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுத்து விட முடியாது; எடப்பாடி அரசு மற்றும் பா.ஜ.க. ஆட்சியாளர்களின் கூட்டுச்சதி தூள் தூளாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.