‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டம் தொடங்கியது: 549 மனுக்களுக்குத் தீா்வு
உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆறு மாவட்டங்களில் பெறப்பட்ட 549 மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆறு மாவட்டங்களில் பெறப்பட்ட 549 மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், பயனாளிகளுக்கு நலத் திட்டங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமாா் 4 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இவை மாவட்ட வாரியாக, வகைகளாகப் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் பராமரிக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை சுமாா் 70,000 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மனுதாரருக்கு குறுஞ்செய்தி: ஒவ்வொரு மனுவும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன், தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் அளிக்கப்பட்டு, அதனுடன் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு செய்யப்பட்டு உடனடியாகத் தீா்வு காண அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.
இதுவரை சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருவாரூா், தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் இருந்து 549 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியதைக் குறிக்கும் வகையில், 10 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை அளித்தாா்.

முதியோா் உதவித் தொகை, மாற்றுத் திறனாளி உதவித் தொகை, தையல் இயந்திரம், வாரிசு சான்றிதழ், காது கேட்கும் கருவி, இலவச வீட்டு மனைப் பட்டா, வீடு கட்ட உதவி, சொட்டுநீா் பாசனம் ஆகிய உதவிகளை பயனாளிகளுக்கு முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.
உட்கட்டமைப்புத் திட்டங்கள்: ஊராட்சிகளில் உட்கட்டமைப்பு மேம்பாடு கோரி அளிக்கப்பட்ட மனுக்களின் மீதும் தீா்வு காணப்பட்டது. திருவள்ளூா் அழிஞ்சிவாக்கத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம், சித்தேரி கால்வாயில் தடுப்பணை, ராணிப்பேட்டை அசநெல்லிகுப்பத்தில் சிமெண்ட் சாலை, எருக்கம்தொட்டி கிராமத்தில் குடிநீா் குழாய் அமைத்தல் போன்ற பணிகளுக்கான உத்தரவுகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வழங்கப்பட்டன. உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென முதல்வா் அறிவுரை கூறியதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உங்கள் தொகுதியில் முதல்வா் திட்ட சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...