சேலம் இரும்பாலை வளாகத்தில் முதல்வர் நாளை ஆய்வு

சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு செய்கிறார்.
சேலம் இரும்பாலை வளாகத்தில் தற்காலிக மருத்துவமனை கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி.
சேலம் இரும்பாலை வளாகத்தில் தற்காலிக மருத்துவமனை கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி.


சேலம்: சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு செய்கிறார்.

சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 படுக்கைகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை கட்டுமானப் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு புதன்கிழமை ஆய்வு செய்தார்.

ஆய்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி கூறியது:
 
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சென்னையில் இருந்து சேலத்திற்கு தனி விமானத்தில் வருகை தருகிறார். பின்னர் சேலம் இரும்பாலை வளாகத்தில் நடைபெற்று வரும் தற்காலிக மருத்துவமனை கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிடும் முதல்வர், இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் மற்றும் இரும்பாலை அதிகாரிகளுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். முழுக்க முழுக்க கரோனா தொற்று தடுப்புப் பணிகளை பார்வையிடுவதற்காக மட்டுமே முதல்வர் வருகை தர உள்ளதால் பொதுமக்கள் மற்றும் திமுகவினர் யாரும் இரும்பாலை வளாகத்திற்கு வர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

தொற்று காலம் என்பதால் முதல்வர் ஆய்வில் அனுமதிக்கப்பட்ட அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க முடியும். மற்றவர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு யாரும் வர வேண்டாம் என தயவு செய்து கேட்டுக் கொள்கிறோம். சேலம் ஆய்வை முடித்த பிறகு ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.
 
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் உற்பத்தியில் எந்த வித பாதிப்பும் இல்லை. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கன்வேயர் பெல்ட்-ஐ சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியிலும் மின் உற்பத்தி சீராக உள்ளது. இதனால் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.
 
சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைய உள்ள தற்காலிக மருத்துவமனைக்கு நோயாளிகள் வருவதற்கு தேவையான ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆத்தூர் மற்றும் மேட்டூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆம்புலன்ஸ்கள் வந்து செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுன் அமைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் படுக்கைகள் அமைக்கவும் தற்போது கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளோம். ஆக்சிஜன் குழாய்கள் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது.
 
சேலத்தில் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி நோயாளிகளை அந்த மருத்துவமனைகள் அனுமதித்ததுடன் அவர்களுக்குத் தேவையான ஆக்சிஜனையும் வழங்கவில்லை. 

சேலம் மாவட்டத்தில் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து, அங்குள்ள நோயாளிகளின் தேவைக்கேற்ப ஆக்சிஜனை வழங்கி வருகின்றனர். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நோயாளிகளின் உறவினர்களிடம் ரெம்டெசிவர் மருந்தை வாங்கச் சொல்லி வற்புறுத்தக்கூடாது என முதல்வர் தெரிவித்துள்ளார். முதல்வரின் உத்தரவை மீறி எந்த தனியார் மருத்துவமனையாவது செயல்பட்டால் அவர்கள் மீது உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழக மக்களின் நலன் கருதி முதல்வர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். கரோனா தொற்றில் இருந்து தமிழக மக்களை காக்க அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.
 
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகம், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் வடக்குத் தொகுதி எம்எல்ஏ ஆர்.ராஜேந்திரன்,கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் எம்.பி.  எஸ்.ஆர்.பார்த்திபன், பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அருள், சதாசிவம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com