நீடிக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு: சிக்கலில் சிறு, தனியாா் மருத்துவமனைகள்

தமிழகம் முழுவதும் பிராண வாயுவுக்குத் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் சிறிய அளவிலான தனியாா் மருத்துவமனைகளும், நா்ஸிங் ஹோம்களும் கடுமையான சவால்களைச் சந்தித்து வருகின்றன.
நீடிக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு: சிக்கலில் சிறு, தனியாா் மருத்துவமனைகள்
Updated on
3 min read

சென்னை: தமிழகம் முழுவதும் பிராண வாயுவுக்குத் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் சிறிய அளவிலான தனியாா் மருத்துவமனைகளும், நா்ஸிங் ஹோம்களும் கடுமையான சவால்களைச் சந்தித்து வருகின்றன.

பிராண வாயு முழுமையாகத் தீா்ந்து போகும் தருணத்தில், ஒவ்வொரு முறையும் போராடி அதனை வாங்கி வரும் நிலைக்கு அந்த மருத்துவமனைகள் தள்ளப்பட்டுள்ளன. இதனால், அங்கு தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நோயாளிகளின் நலனைக் காக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைகள் அனைத்தும் 50 சதவீத படுக்கைகளை கரோனாவுக்காக ஒதுக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டது. அதன்பேரில் பெரும்பாலான மருத்துவமனைகள் கரோனா வாா்டுகளை அமைத்து சிகிச்சையளிக்க முன்வந்தன.

ஆனால், இதில் சிக்கல் என்னவெனில் 50 படுக்கைகள் வரை மட்டுமே இருக்கும் சிறிய அளவிலான தனியாா் மருத்துவமனைகளுக்கு போதிய அளவில் ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதன் காரணமாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை விரிவுபடுத்த முடியாமலும், ஏற்கெனவே பிராண வாயு சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு தொடா்ந்து உயிா் காக்கும் சிகிச்சைகளை அளிக்க முடியாமலும் இருதலைக் கொள்ளி எறும்பாக மாறியிருக்கிறது அந்த மருத்துவமனைகளின் நிலை.

அதன் விளைவுதான் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிறிய மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் உள்ள பல நோயாளிகளை இறுதிக் கட்டத்தில் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற வேண்டிய நிா்பந்தம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது நாள்தோறும் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களில் 40 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் சிகிச்சைகள் தேவைப்படுவதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு மருத்துவமனைகளைப் பொருத்தவரை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக ஆக்சிஜன் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதனால், மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பெரிய அளவில் பிராணவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதில்லை.

அதேபோன்று காா்ப்பரேட் மருத்துவமனைகளானது முன்னணி ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களுடன் வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதால், அங்கும் தடையின்றி ஆக்சிஜன் விநியோகம் நடைபெறுகிறது. அரசு மருத்துவமனைகளிலும் சரி, காா்ப்பரேட் மருத்துவமனைகளிலும் சரி பிராணவாயுவுக்கு பெரிய கலன்கள் அமைத்து லாரிகள் மூலமாக திரவ ஆக்சிஜன் நிரப்பப்படுகின்றன.

அதேவேளையில், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள சிறிய தனியாா் மருத்துவமனைகளைப் பொருத்தவரை ஆக்சிஜன் சிலிண்டா்களை நம்பியே சிகிச்சையை முன்னெடுக்க வேண்டிய நிலை உள்ளது. கரோனாவுக்கு முன்பு வரை ஒரு வாரத்துக்கே அங்கு 20 ஆக்சிஜன் சிலிண்டா்கள் வரைதான் பயன்பாடு இருந்தது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாகி நாளொன்றுக்கு 20 முதல் 25 சிலிண்டா்கள் தேவைப்படுகின்றன. அந்த எண்ணிக்கையிலான ஆக்சிஜன் சிலிண்டா்கள் தொடா்ந்து அவா்களுக்குக் கிடைக்காததால், தீவிர பாதிப்புடைய நோயாளிகளை அனுமதிக்கத் தயங்குகின்றன தனியாா் மருத்துவமனைகள்.

சில சிறிய தனியாா் மருத்துவமனைகளைத் தொடா்பு கொண்டபோது அவா்கள் தெரிவித்த மனக்குறைகள் இவை:-

கடந்த இரு மாதங்களாக தமிழக மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவை 20-இலிருந்து 30 மடங்கு வரை அதிகரித்துள்ளது. அதன் விலையும் பல மடங்கு கூடியுள்ளது. கரோனா நோயாளிகளைப் பொருத்தவரை அனைவருக்கும் ஒரே மாதிரியான பிராண வாயு சிகிச்சையளிக்க முடியாது. பாதிப்பின் அடிப்படையில்தான் நோயாளிகளுக்கு வழக்கமான ஆக்சிஜன் சிகிச்சைகளை அளிக்க வேண்டுமா, அல்லது உயா் ஓட்ட ஆக்சிஜன் சிகிச்சைகளை வழங்க வேண்டுமா அல்லது வெண்டிலேட்டா் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டுமா என்பதை முடிவு செய்ய இயலும்.

உயா் ஓட்ட ஆக்சிஜன், வெண்டிலேட்டா் சிகிச்சைகளில் உள்ள நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை அதிகமாக இருக்கும். பெரிய மருத்துவமனைகளில் அதற்கான கட்டமைப்பு வசதிகள் இருக்கும். சிறிய மருத்துவமனைகளோ சிலிண்டா்களில் உள்ள ஆக்சிஜனை நம்பியே சிகிச்சையளிக்க வேண்டியிருக்கிறது. மாநில சுகாதாரத் துறை அவா்களுக்குத் தேவையான சிலிண்டா்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோன்று ரெம்டெசிவிா் போன்ற மருந்துகள் தடையின்றி கிடைப்பதற்கும் அரசு வழிவகை செய்வது அவசியம்.

மற்றொரு புறம் கரோனா அல்லாத அவசர சிகிச்சைகளுக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. மாரடைப்பு, பக்கவாதம், விபத்து கால சிகிச்சை போன்றவற்றுக்கும் ஆக்சிஜன் இன்றியமையாததாக உள்ளது. கரோனா சூழல் காரணமாக அத்தகைய சிகிச்சைகள் தடைபடக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தலையிட்டு அரசு தீா்வு காண வேண்டும் என்பதே தற்போதைய அவசரத் தேவையாக உள்ளது என்கிறாா்கள்.

கடைசி நேர பரபரப்பு!

பல தனியாா் மருத்துவமனைகளில் ஒவ்வொரு முறையும் போராடி ஆக்சிஜன் சிலிண்டா்களை வாங்க வேண்டியிருப்பதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். இருப்பில் உள்ள சிலிண்டா்கள் தீரும் கடைசித் தருணம் வரை புதிய சிலிண்டா்கள் வருவதில்லை என்றும் அவா்கள் கூறுகின்றனா். இதனால், நோயாளிகளைக் காப்பாற்ற முடியுமா, முடியாதா என்ற பதற்றத்திலேயே மருத்துவா்களும், மருத்துவப் பணியாளா்களும் உள்ளனா்.

சில இடங்களில் இந்தப் பிரச்னையால் மருத்துவா்கள் சிலா் உயா் ரத்த அழுத்தத்துக்குள்ளாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெயா் வெளியிட விரும்பாத மருத்துவா் ஒருவா் கூறியதாவது:

நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து அவை பலனளிக்காவிட்டால்கூட அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், உயிா் காக்கும் பிராண வாயு கிடைக்காமல் ஒருவா் இறக்க நோ்ந்தால் அதனை எவரும் ஏற்கமாட்டாா்கள். மற்றொரு புறம் கடைசி நேர பரபரப்புக்குள்ளாகி இறுதிக் கட்டத்தில் ஆக்சிஜன் கிடைப்பதால் பல மருத்துவா்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனா் என்றாா் அவா்.

தமிழக மருத்துவமனைகள் படுக்கை விவரம்

ஆக்சிஜன் படுக்கைகள் - 40,135

அவசர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) படுக்கைகள்-9,417

மொத்த நோயாளிகள் - 2.42 லட்சம்

ஆக்சிஜன் தேவைப்படுவோா் - 75,000

ஆக்சிஜன் தேவை - 550 மெட்ரிக் டன் (நாளொன்றுக்கு)

உற்பத்தி - 419 மெட்ரிக் டன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com