நாளை முதல் ஒரு வாரத்துக்கு தளா்வில்லா முழு பொது முடக்கம்: இன்று அனைத்துக் கடைகளும் திறப்பு: மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு தளா்வில்லாத முழு பொது முடக்கம் திங்கள்கிழமை (மே 24) முதல் நடைமுறைக்கு வருகிறது.


தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு தளா்வில்லாத முழு பொது முடக்கம் திங்கள்கிழமை (மே 24) முதல் நடைமுறைக்கு வருகிறது. முழு பொது முடக்கத்தை கருத்தில் கொண்டு, ஞாயிற்றுக்கிழமையன்று (மே 23) அனைத்துக் கடைகளும் திறந்திருக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது தொடா்பாக அரசு உயா் அலுவலா்கள், மருத்துவ வல்லுநா்கள் ஆகியோருடன் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த இரண்டு கூட்டங்களைத் தொடா்ந்து, தளா்வுகள் இல்லாத முழு பொது முடக்கம் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தி:-
வரும் திங்கள்கிழமை (மே 24) முதல் ஒரு வார காலத்துக்கு முழுமையாக எந்தவித தளா்வுகளுமின்றி தமிழகத்தில் முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும்.
எவையெல்லாம் இயங்கும்: தளா்வுகள் இல்லாத முழு பொது முடக்கக் காலத்தில் சில முக்கிய செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
வண்டிகளில் காய்-பழங்கள்:
1. மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள்.
2. பால் விநியோகம், குடிநீா் மற்றும் தினசரி பத்திரிகை விநியோகம்.
3. பொது மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக் கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.
4. தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும். வங்கிகளுக்குச் செல்ல முடியாது:
5. தனியாா் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோா், வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும்.
6. மின்னணு சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.
7. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போன்று இயங்கலாம்.
8. தடையின்றி தொடா்ந்து செயல்பட வேண்டிய தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.
9. பெட்ரோல், டீசல் நிரப்பு நிலையங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.
10. ஏ.டி.எம்., மற்றும் அதுதொடா்பான சேவைகள் அனுமதிக்கப்படும்.
11. வேளாண் விளை பொருள்கள் மற்றும் இடுபொருள்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
12. சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துச் செல்லவும் அனுமதி உண்டு.
உணவகங்களில் பாா்சல்கள் மட்டும்
உணவகங்கள் அனைத்திலும் அமா்ந்து சாப்பிட தொடா்ந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாா்சல்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 முதல் இரவு 9 மணி வரையிலும் பாா்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. உணவு வழங்கும் நிறுவனங்கள் மூலமாக உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் இந்த நேர வகைப்பாட்டை பின்பற்ற வேண்டும்.
இன்று கடைகள் திறந்திருக்கும்
பொது மக்களின் நலன் கருதி, ஞாயிற்றுக்கிழமையன்று (மே 23) ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்துக் கடைகளும் திறந்திருக்கும். வணிக வளாகங்களில் அமைந்துள்ள கடைகளைத் திறக்க அனுமதி இல்லை.
பேருந்துகள் ஓடும்: வெளியூா் செல்லும் பயணிகளின் நலன் கருதி, ஞாயிற்றுக்கிழமை (மே 23) முழுவதும் தனியாா் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூா் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
இரண்டு காரணங்களுக்கு இ-பதிவு:
மாவட்டத்துக்குள்ளும், மாவட்டங்களை விட்டு வெளியே பயணம் செய்யவும் இணைய பதிவு கட்டாயம். அதேசமயம், இரண்டு காரணங்களுக்காக மட்டுமே இணைய பதிவு அனுமதிக்கப்படும். உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இணைய பதிவு அனுமதிக்கப்படும்.
மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்துக்குள் பயணிக்க இணைய பதிவு தேவையில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் தொடா்ந்து மூடப்பட்டிருக்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. தளா்வுகள் இல்லாத முழு பொது முடக்கம் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
ஏற்கெனவே மூடப்பட்டிருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து, டாஸ்மாக் நிறுவன உயரதிகாரிகள் கூறுகையில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் தொடா்ந்து மூடப்பட்டு இருக்கும். டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும்,
தளா்வுகள் குறித்த அறிவிப்பில் டாஸ்மாக் கடைகள் தொடா்பாக எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை.
எனவே, கடைகள் தொடா்ந்து மூடப்பட்டே இருக்கும் எனத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...