தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

கரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

News image

மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

Updated On :26 மே 2021, 7:06 am

DIN

கரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: 

கரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊடகவியலாளர்கள் பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்ப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியப்
பங்காற்றி வருகிறார்கள். மக்களுக்கும், அரசுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இக்காலக்கட்டத்தில் சிறப்பாக இயங்கிவரும் இவர்களது பணியினை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் (அரசு அங்கீகார அட்டை / மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை / இலவசப் பேருந்துப் பயண அட்டை போன்ற ஏதேனும் ஒரு வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்) ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையினை உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்கள்.

கடந்த ஆட்சியின்போது ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை 3 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை தற்போது உயர்த்தி வழங்கக் கோரி பெறப்பட்ட கோரிக்கையினை கனிவோடு பரிசீலித்த முதல்வர், ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையினை ரூபாய் 3 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று, கடந்த ஆட்சியின்போது பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கரோனா நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டால், அவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதனையும் உயர்த்தி வழங்கக் கோரி ஊடகவியலாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையினைப் பரிவுடன் பரிசீலித்து, அதனை ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பத்திரிகைத் துறை மற்றும் அனைத்து ஊடகத் துறை நண்பர்களும் இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்கள் பணியினை கவனமுடன் மேற்கொள்ள முதல்வர் இத்தருணத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.