சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதிமுக அரசு பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கூறி இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் உச்சபட்சமாக 6900 பேர் பாதிக்கப்பட்டார்கள். நாங்கள் தொடர்ந்து எடுத்த நடவடிக்கையால், கடந்த பிப்ரவரி 26- ஆம் தேதி 487 பேர்தான் பாதிக்கப்பட்டனர். அன்றையதினம் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் எந்த அதிகாரியும் அழைத்துப் பேச முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் பரவல் அதிகரித்ததால் தலைமைச் செயலாளரை அழைத்துப் பேசும்போது, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியும் கூட அதிகாரிகள் மட்டுமே ஆலோசனை நடத்த மட்டுமே அனுமதி கிடைத்தது. அப்போதும் முயற்சி எடுத்துக் கொண்டே இருந்தேன். சுகாதாரத்துறை அமைச்சர் சொன்னது உண்மைக்கு புறம்பான செய்தி.
இதேபோன்று, முதல்வர் ஸ்டாலின் முதல் அலையில் கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்று கூறியிருக்கிறார். அது தவறு, வல்லரசு நாடுகளில் கூட அதனை கட்டுப்படுத்தவில்லை. அதிமுக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்ததால் தான் 500-க்கு கீழ் தொற்று பாதிப்பு குறைந்தது. கரோனா குறித்து எதுவும் தெரியாத நிலையில் உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத்துறை அளித்த வழிகாட்டுதலை பின்பற்றி குணமடையச் செய்தோம். ரெம்டெசிவர், முகக்கவசம் உள்ளிட்ட அனைத்தும் போதிய அளவில் கையிருப்பில் வைத்திருந்தோம். தடுப்பூசி வீணடிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளரை கேட்டால் தெளிவுபடுத்துவார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தடுப்பூசி குறித்து சந்தேகம் தெரிவித்த ஸ்டாலின், தற்போது அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இப்படி கருத்துக்களை கூறும்போது மக்களிடையே குழப்பம் ஏற்பட்டு விட்டது. இப்போது கூறும் கருத்துக்களை அவர், அப்போது தெளிவாக பேசியிருந்தால், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா தொற்று விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. எதிர்க்கட்சிகளின் பணி எல்லா விவரங்களையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதே. ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். இன்றைக்கு மயானங்களில் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற முதல்வரின் கூற்றிற்கு இணங்க, எல்லா இடங்களில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அங்காங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உதவி செய்து வருகிறார்கள்.
அரசு காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிவிப்பு கொடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் கட்டணங்களை பெற்றுக் கொண்டு தனியார் மருத்துவமனைகள் செயல்பட வேண்டும். இது சோதனையான நேரம். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு மறந்து செயல்பட வேண்டும். நூறு நாள்களுக்கு பின்னரே கருத்து சொல்ல வேண்டும் என்று இருந்தேன். எங்களுடைய அரசை குறை சொன்னதால்தான், நாங்கள் கருத்து சொல்ல வேண்டி வந்தது.
கிராமங்களில் தொற்றுப்பரவலை தடுக்க, புதிதாக வருபவர்களுக்கு உடனடியாக தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்கிற நடைமுறை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். கிருமிநாசினி தொடர்ந்து அடிக்க வேண்டும். மேற்கு மாவட்டங்களில் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அதிக அளவில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும்.