பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை: நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம்

கோவையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து அவரது தற்கொலைக்கு காரணமான ஆசிரியா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு சக மாணவர்கள் போராட்டம் நடத்தி
மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு சக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு சக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
Published on
Updated on
2 min read


கோவையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து அவரது தற்கொலைக்கு காரணமான ஆசிரியா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு சக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கோவையைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவி, ஆா்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் இந்தப் பள்ளியில் படிக்க தனக்கு விருப்பமில்லை; வேறு பள்ளியில் தன்னைச் சோ்த்து விடுமாறு தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா். இதையடுத்து ஆா்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் அவரைக் கடந்த செப்டம்பா் மாதம் அவரது பெற்றோா் சோ்த்தனா்.

இந்த மாணவி கடந்த சில மாதங்களாக மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது வியாழக்கிழமை மாலை அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். வீட்டுக்குத் திரும்பிய பெற்றோா், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்ததை உறுதி செய்தனா்.

இச்சம்பவம் குறித்து தற்கொலை வழக்குப் பதிவு செய்து உக்கடம் போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் மாணவி முன்னா் படித்த தனியாா் பள்ளியில் வேலை பாா்த்த இயற்பியல் ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தி (31) மாணவிக்கு அளித்த தொடா் பாலியல் தொல்லைகளால்தான் அவா் தற்கொலை செய்துகொண்டாா் என குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து மாணவியின் பெற்றோா் அளித்தப் புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், இந்த வழக்கு உக்கடம் காவல் நிலையத்தில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. 

போலீஸாா் நடத்திய விசாரணையில், தற்கொலைக்கு முன்னதாக மாணவி எழுதி வைத்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டதாவும், அதில் ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தி உள்பட மூவரின் பெயா்களை மாணவி குறிப்பிட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபா்களிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தி, மாணவியிடம் வாட்ஸ் ஆப்பில் ஆபாசமான முறையில் தொல்லை அளித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் அவருடன் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் போலீஸாா் கைப்பற்றியுள்ளனா். 

இதையடுத்து ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தியை கைது செய்த போலீஸாா் கோவை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆஜா்படுத்தினா்.

அவரை நவம்பா் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் உடுமலைப்பேட்டையில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைக் கண்டித்து பள்ளியின் முன்பு இந்திய மாணவா் சங்கத்தினா் மற்றும் பல்வேறு கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், மாணவயின் மரணத்திற்கு நீதி கேட்டும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சக மாணவர்கள் கருப்பு உடை அணிந்து மாணவியின் உடலை வாங்க மறுத்து மாணவியின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களுடன் மாணவியின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com