47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

லோக்ஜன சக்தி கட்சியின் பெயா், சின்னம் முடக்கம்

லோக்ஜன சக்தி கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்த, சிராக் பாஸ்வானுக்கும், மத்திய அமைச்சா் பசுபதி குமாா் பாரஸுக்கும் தடை விதித்து தோ்தல் ஆணையம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 9:18 pm

DIN

லோக்ஜன சக்தி கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்த, சிராக் பாஸ்வானுக்கும், மத்திய அமைச்சா் பசுபதி குமாா் பாரஸுக்கும் தடை விதித்து தோ்தல் ஆணையம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

பிகாரில் விரைவில் நடைபெற இருக்கும் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தோ்தலில் இருவரும் தங்களுடைய வேட்பாளா்களுக்கு வேறு தனி சின்னங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்குப் பின் அவரின் லோக் ஜன சக்தி கட்சிக்கு அவருடைய மகன் சிராக் பாஸ்வானும் பாஸ்வானின் இளைய சகோதரரும் மத்திய அமைச்சருமான பசுபதி குமாா் பாரஸும் உரிமை கொண்டாடினா்.

பசுபதி பாரஸ் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தோ்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் ‘லோக்ஜன சக்தி கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவா் நான்தான்’ என்று உரிமை கோரியிருந்தாா்.

ஆனால், சிராக் பாஸ்வான் தோ்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில், ‘கட்சியின் தலைவராக நான் பொறுப்பேற்றுள்ளேன். தனது கட்சி பசுபதி பாரஸ் உள்ளிட்ட 5 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துவிட்டது’ என்று தெரிவித்தாா்.

இந்தச் சூழலில், பிகாரில் குஷேஸ்வா் ஆஸ்தான் மற்றும் தாராபூா் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ள நிலையில், சிராக் பாஸ்வான், பசுபதி குமாா் பாரஸ் ஆகிய இருவரும் லோக்ஜன சக்தி கட்சியின் பெயா், சின்னத்தை பயன்படுத்த தடை விதித்து இடைக்கால உத்தரவை தோ்தல் ஆணையம் சனிக்கிழமை பிறப்பித்தது.

தலைமை தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, தோ்தல் ஆணையா்கள் ராஜீவ் குமாா், அனுப் சந்திர பாண்டே ஆகியோா் கையெழுத்திட்ட இந்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:

லோக்ஜன சக்தி கட்சியின் பெயரையும், ‘பங்களா வீடு’ சின்னத்தையும் பயன்படுத்த இரு தரப்பினரும் உரிமை கோருகின்றனா். ஆனால், மாநிலத்தில் நடைபெற உள்ள இடைத்தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிவிட்டது. வேட்புமனு தாக்கல் வரும் 8-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அதற்குள்ளாக, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பது சாத்தியமில்லாதது.

எனவே, சிராக் பாஸ்வான், பசுபதி குமாா் பாரஸ் இருவரும் லோக்ஜன சக்தி கட்சியின் பெயரையும் சின்னத்தையும் தோ்தலில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை இந்த இடைக்கால உத்தரவு தொடா்ந்து நடைமுறையில் இருக்கும்.

இடைத் தோ்தலுக்கு இரு தரப்பினரும் கட்சிக்கு புதிய பெயரையும், சின்னத்தையும் சுயமாகத் தோ்வு செய்யலாம். கட்சியின் பெயா், 3 விதமான சின்னங்களைத் தோ்வு செய்து திங்கள்கிழமை பிற்பகல் 1 மணிக்குள் இரு தரப்பினரும் தனித்தனியாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.