மகாகவி பாரதி நினைவுநாள்: மரியாதை செலுத்தினார் முதல்வர்

சென்னையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மகாகவி பாரதி நினைவுநாள்: மரியாதை செலுத்தினார் முதல்வர்
மகாகவி பாரதி நினைவுநாள்: மரியாதை செலுத்தினார் முதல்வர்


சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள பாரதியாரின் சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

‘உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ எனத் தன் கவிதைகளாலும் எழுத்துகளாலும் விடுதலை உணர்வைத் தட்டி எழுப்பிய பாட்டுக்கொரு புலவன், மகாகவி பாரதியாரின் நினைவுநாளில் அவரது திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னதாக, எழுத்து, கவிதைகள் வழியாக நாட்டு விடுதலைக்கு உழைத்திட்ட பாரதியார் நினைவு தினம் (செப். 11) ஆண்டுதோறும், மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகளில், தேசப் பற்று, தெய்வப் பற்று, தமிழ்ப் பற்று, மானுடப் பற்று ஆகிய நான்கும் கலந்தவர்தான் பாரதியார். நாட்டு விடுதலைக்காகப் போராடியவராக மட்டும் இருந்திருந்தால் அதற்காக மட்டுமே நினைவுகூரப்பட்டிருப்பார். அதையும் தாண்டி, சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் எழுதியதால்தான் பாரதியார் கவிதை வரிகளாய் உலவி வருகிறார். இதனாலேயே திமுக அரசு அமைந்து கருணாநிதி முதல்வரானபோது எட்டயபுரத்தில் பாரதியார் வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவில்லம் ஆக்கினார்கள்.

பாரதிக்கு சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவரது நூற்றாண்டு நினைவை ஒட்டியும் 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதியன்று, அரசு சார்பில் இனி ஆண்டுதோறும் மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும். இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி, பாரதி இளம்கவிஞர் விருதானது மாணவி, மாணவர் ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் அளிக்கப்படும்.

பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள், கட்டுரைகளைத் தொகுத்து "மனதில் உறுதி வேண்டும்' என்ற புத்தகமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com