மானாமதுரையில் மணல் கடத்தல் லாரி புதைந்ததால் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்: போலீசார் விசாரணை

ஆற்றுக்குள் மணல் கடத்திய டிப்பர் லாரி மண்ணில் புதைந்ததால் அதை மீட்க முடியாமல் மணல் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.
மானாமதுரையில் கால்பிரிவு விலக்குப் பகுதியில் மண்ணில் புதைந்த மணல் கடத்தல் லாரியை போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்டனர்.
மானாமதுரையில் கால்பிரிவு விலக்குப் பகுதியில் மண்ணில் புதைந்த மணல் கடத்தல் லாரியை போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்டனர்.
Published on
Updated on
1 min read


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஆற்றுக்குள் மணல் கடத்திய டிப்பர் லாரி மண்ணில் புதைந்ததால் அதை மீட்க முடியாமல் மணல் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர். புதன்கிழமை காலை போலீசார் ஜேசிபி எந்திரம் மூலம் அந்த லாரியை மீட்டு மணல் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

மானாமதுரையில் மதுரை- ராமேஸ்வரம் சாலையில் கால் பிரிவு விலக்கு பகுதியில் தோப்புகள் அதிகளவில் உள்ளன. இந்த தோப்புகளின் அருகில் செல்லும் வைகை ஆற்றில் மணல் வளம் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த தோப்புகளின் வழியாக மணல் கொள்ளையர்கள் லாரிகளை ஆற்றுக்குள் இறங்கி மணலை திருடிச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. சில தோப்புகளின் உரிமையாளர்கள் மணல் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாகவும் செயல்பட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர். 

இந்நிலையில், மானாமதுரையில் மதுரை- ராமேஸ்வரம் சாலையில் கால் பிரிவு விலக்குப் பகுதியில் வைகை ஆற்றுக்குள் மணல் கொள்ளையர்கள் சரக்கு வேனில் ஆள்களை கூட்டி வந்து டிப்பர் லாரிகளில் கடத்துவதற்காக மணலை ஏற்றிக் கொண்டிருந்தனர். இந்த லாரிகளில் மணல் நிரப்பிய ஒரு லாரியை வெளியேற்ற முயன்ற போது லாரி மண்ணில் புதைந்தது. இதனால் லாரியை வெளியே எடுக்க மணல் கொள்ளையர்கள் முயன்றும் முடியாமல் போனதால் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய அந்த டிப்பர் லாரியை மணல் கொள்ளையர்கள் அங்கேயே விட்டுவிட்டு தப்பிவிட்டனர். 

மேலும் மணல் கொள்ளைக்கு பயன்படுத்த ஆள்களை ஏற்றி வந்த சரக்கு வேனும் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது. 

இது குறித்த தகவல் மானாமதுரை போலீசாருக்கு கிடைத்தவுடன் புதன்கிழமை காலை போலீசார் அந்தப் பகுதிக்குச் சென்று மணல் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற மண்ணில் புதைந்த அந்த லாரியை ஜேசிபி எந்திரத்தை கொண்டு மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் ஆற்றுக்குள் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேனையும் போலீசார் கைப்பற்றினர். 

போலீசார் மீட்டுவந்த கடத்தல்  லாரி சிவகங்கை பகுதியைச் சேர்ந்தது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மணல் கடத்தல் சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப் பதிந்து மணல் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com