விலைக் குறைந்த கரோனா தடுப்பூசியை ஏன் அலட்சியப்படுத்துகிறீர்கள்? கேட்கிறார் மருத்துவர்

வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நுண்ணுயிரியல் பிரிவு பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர் ஜாகோப் ஜான் கேள்வி எழுப்பியுள்ளார்.
விலைக் குறைந்த கரோனா தடுப்பூசியை ஏன் அலட்சியப்படுத்துகிறீர்கள்? கேட்கிறார் மருத்துவர்
விலைக் குறைந்த கரோனா தடுப்பூசியை ஏன் அலட்சியப்படுத்துகிறீர்கள்? கேட்கிறார் மருத்துவர்


மிகவும் விலைக் குறைந்த கரோனா தடுப்பூசியாக விளங்கும் முகக்கவசத்தை ஏன் மக்கள் அலட்சியப்படுத்துகிறார்கள் என்று வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நுண்ணுயிரியல் பிரிவு பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர் ஜாகோப் ஜான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரோனாவிலிருந்து நம்மை காக்கும் மிகச் சிறந்த ஆயுதமாக இருப்பது முகக்கவசம் தான் என்கிறார் ஜாகோப் ஜான்.

இது பற்றி அவர் கூறுகையில், கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்க உதவும் மிகப்பெரிய ஆயுதம், பத்து கரோனா தடுப்பூசிகளுக்கு இணையானது, அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கும் கரோனா தடுப்பூசி முகக்கவசம் தான். அதனை ஏன் மக்கள் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்பதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் கூட்டமாக இருக்கும் புகைப்படங்களைப் பார்க்கிறேன். அதில் குறைந்தபட்சம் 5 சதவீதம் பேர் கூட முகக்கவசம் அணிவதில்லை. ஒருவர் முகக்கவசத்தை முழுமையாக அணிந்திருந்தால், அவர் 90 சதவீதம் கரோனா தொற்றிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும். இது ஒன்றுதான் மிக மலிவான மற்றும் மிகச் சிறந்த பாதுகாப்பை அளிக்கும் தடுப்பூசியாக உள்ளது என்கிறார்.

சமூக இடைவெளி என்பது மிகவும் முக்கியம். ஆனால், அதை விடவும் முகக்கவசம் அவசியம். இரண்டு பேரும் முகக்கவசம் அணிந்து கொண்டிருக்கும் போது 2 அடி இடைவெளியில் பேசலாம். ஆனால், முகக்கவசம் அணியாதவர் என்றால் 6 அடி தொலைவில் மற்றவர் நிற்க வேண்டும். எனவே, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக அனைவரும் பின்பற்ற வேண்டும். 

முதல் அலையின் போது இருந்த கரோனா வைரஸும், தற்போது இரண்டாவது பேரலையின் போது பரவி வரும் கரோனா வைரஸுக்கும் இருக்கும் வேறுபாடு என்ன? தற்போது உருமாறிய அதிதீவிர கரோனா வைரஸ் பற்றி மக்கள் என்ன அறிந்து கொள்ள வேண்டும்?

தற்போது இந்தியாவில் காணப்படும் கரோனா வைரஸ் பற்றி மிகவும் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட ஆய்வுக் கூடங்கள்தான் ஆராய்ச்சி செய்து, வேறுபாடுகளைத் தெரிவிக்க வேண்டும். ஆனால்,  தற்போது அது பற்றி ஆய்வு நடத்துவதற்கான வெகு தொலைவில் நமது சுகாதாரத் துறை உள்ளது. ஆனால், மருத்துவர்களும், சுகாதார அமைப்பும், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவே திணறிக் கொண்டிருக்கும் போது இது பற்றி எல்லாம் ஆய்வு நடத்துவது யார்? 

இந்த ஆய்வுகளை நடத்த எங்கிருந்து நிதி கிடைக்கும்? இதற்குத் தேவையான புள்ளி விவரங்களை எல்லாம் சேகரிப்பது யார்? தொற்றுநோய்த் துறையினரா இதற்கான புள்ளி விவரங்களைத் திரட்ட முடியும்? சிகிச்சையிலிருக்கும் நோயாளி ஒருவர் கரோனாவால் பலியாகிவிட்டால், மருத்துவர் அடுத்த நோயாளிக்கு சிகிச்சையளிக்கச் சென்றுவிடுவார். அதைவிட்டுவிட்டு, இறந்த நோயாளி ஏன் இறந்தார் என்று ஆய்வு நடத்திக் கொண்டிருக்க முடியுமா? தற்போதைய சூழ்நிலையில் சுகாதாரத் துறையினருக்கு அதற்கு நேரமில்லை. ஒரு வீடு எரிந்து கொண்டிருக்கும் போது, நாம் கிணறு தோண்டிக் கொண்டிருக்க முடியாது. கிடைக்கும் நீரைப்  பயன்படுத்தி தீயை அணைக்கத்தான் முடியும். அதுபோலத்தான் என்கிறார் மருத்துவர் ஜாகோப் ஜான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com