கரோனா அறிகுறி இருந்தால் என்ன செய்வது? நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்கள்

எங்குப் பார்த்தாலும் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற செய்திகள் தான் ஊடகத்தின் தலைப்புச் செய்திகளாகியுள்ளன.
கரோனா அறிகுறி இருந்தால் என்ன செய்வது? நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்கள்
கரோனா அறிகுறி இருந்தால் என்ன செய்வது? நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்கள்


நாட்டில் கரோனா பேரலையின் இரண்டாவது தாக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. எங்குப் பார்த்தாலும் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற செய்திகள் தான் ஊடகத்தின் தலைப்புச் செய்திகளாகியுள்ளன.

தொடர்ந்து இரண்டு மணி நேரம் கரோனா பற்றிய செய்தியைப் பார்த்தாலோ படித்தாலோ போதும், நமக்கு மிக அருகே கரோனா தொற்று அமர்ந்து கொண்டு நம்மை தாக்கக் காத்திருப்பது போன்ற அச்சம் ஏற்பட்டு விடும் என்பது போன்ற மீம்ஸ்கள் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் செய்கின்றன. நிலைமை அப்படி.

ஒரேயடியாய் கரோனா தொற்றுப் பரவலைப் பார்த்தும், நினைத்தும் பொதுமக்கள் கலங்க வேண்டாம். ஒரே ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். கரோனா பாதிக்கும் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியது கட்டாயமல்ல.

கரோனாவை நினைத்துக் கலங்கி நிற்கும் பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றுள்ளோம்.

இது குறித்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நுண்ணுயிரித் துறை பேராசிரியர் டாக்டர் ஜாகோப் ஜான், பெங்களூருவில் உள்ள இந்திய பொது சுகாதார மையத்தின் தொற்றுநோய் துறை மூத்த பேராசிரியர் மருத்துவர் கிரிதர பாபு ஆகியோர் பொதுமக்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

கரோனா பாதித்து விடுமோ? இது கரோனா அறிகுறியா? என்று கலங்குவோருக்கு அவர்கள் சொல்வது என்னவென்றால்..

மருத்துவர் ஜான்: கடந்த ஆண்டு கரோனா முதல் அலையில் இருந்ததைப் போன்றே, கரோனா நோயாளிகள் லேசான அறிகுறிகள் தென்பட்டால் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம் என்ற நிலைதான் தற்போதும் நீடிக்கிறது. ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. அவருக்கு தொண்டை வலி, காய்ச்சல், தலைவலி, சுவை மற்றும் மணம் அறியும் தன்மையை இழத்தல் போன்றவை ஏற்பட்டால் அதற்குண்டான மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வாங்கி உட்கொண்டு, வீட்டிலேயே இருந்து கொள்ளலாம். கரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொண்டு, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

மருத்துவர் பாபு: ஒருவர் மருத்துவ ரீதியாக ஆரோக்கியமாக இருந்தால், எந்த பெரிய பாதிப்பும் இல்லாமல் அல்லது லேசான அறிகுறிகளுடன் இருந்தால், காய்ச்சல் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்குள் இருந்து, உடலில் ஆக்ஸிஜன் அளவு 95%க்கு மேல் இருந்தால், அவர்கள் நிச்சயமாக வீட்டிலேயே ஓய்வெடுக்கலாம்.

ஆனால், மூத்த குடிமக்கள், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய பாதிப்பு உள்ளிட்ட வேறு ஏதேனும் நோய் இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்ற பிறகு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.  இவர்கள் 24 மணி நேரமும் மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வீட்டில் இருக்கிறோம்.. என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

மருத்துவர் ஜான்: மருத்துவரை தொலைபேசி மூலமாக அழைத்து ஆலோசனை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப் படி மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஓய்வெடுங்கள். சிலர் பல்ஸி ஆக்ஸிமீட்டர் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். அதன் மூலம் உடலில் ஆக்ஸிஜன் அளவை சரிபார்த்து 95% மேல் இருந்தால் கவலைப்பட வேண்டாம் என்கிறார்.

எனவே, கரோனா வந்துவிடுமோ என்ற அச்சமே பலரையும் பெரிய தொற்றாக பாதித்து வருகிறது. எனவே அச்சத்திலிருந்து விலகுங்கள். எச்சரிக்கையுடன் வாழுங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com