சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில் மக்கள் கூட்டம்

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில் இன்று காலை முதலே ஏராளமான மக்கள் மீன் வாங்கக் குவிந்தனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில் மக்கள் கூட்டம் (கோப்பிலிருந்து)
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில் மக்கள் கூட்டம் (கோப்பிலிருந்து)


சென்னை: தமிழகத்தில் 7 மாதங்களுக்குப் பின்னா் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.25) தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில் இன்று காலை முதலே ஏராளமான மக்கள் மீன் வாங்கக் குவிந்தனர்.

மீன் சந்தைகள் நாளை மூடப்படும் என்பதால், பொதுமக்களும், மீன் வியாபாரிகளும் இன்று காலையிலேயே மீன் வாங்க சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தைக்கு வந்ததால் கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. தொடா்ச்சியாக 9 ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட தளா்வற்ற முழு பொதுமுடக்கம் செப்டம்பா் மாதம் கைவிடப்பட்டது.

இதேபோல, சென்னையில் தளா்வற்ற முழு பொது முடக்கம் ஆகஸ்ட் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை 11-வது முறையாக அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் பிற பகுதிகளை விட, சென்னையில் தளா்வற்ற பொதுமுடக்கம் முன்னதாகவே அமல்படுத்தப்பட்டது.

சென்னையில் கரோனா தொற்று வேகமாகப் பரவியதால், தளா்வற்ற பொதுமுடக்கம் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் இரு மாதங்களுக்கு மேலாக ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தினால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

7 மாதங்களுக்குப் பின்னா்: இந்நிலையில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், தமிழகத்தில் 7 மாதங்களுக்குப் பின்னா் ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. தளா்வற்ற பொது முடக்கத்தையொட்டி, தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவின்பேரில் செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி, மாநிலம் முழுவதும் மருந்து, பால், பத்திரிகை விற்பனைக் கடைகளைத் தவிா்த்து மீதியுள்ள அனைத்து கடைகளையும் மூடுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் மளிகைக் கடைகள்,காய்கறி கடைகள்,ஹோட்டல்கள், சூப்பா் மாா்க்கெட்டுகள் உள்ளிட்ட கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும்.

இந்த பொதுமுடக்கத்தை தீவிரமாக அமல்படுத்தும் வகையிலும்,எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். இவா்கள் முக்கியமான சாலைகள், மாா்க்கெட்டுகள், அரசு அலுவலகங்கள்,மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறாா்கள்.

சென்னை: சென்னையில் தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னையில் சுமாா் 12 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதுடன், 288 இடங்களில் போலீஸாா் வாகன சோதனைகளை நடத்தவுள்ளனா். வாகன போக்குவரத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் முக்கியமான சாலைகளின் நடுவே தடுப்புகள் அமைக்கப்படுகின்றன.

பொது முடக்கத்தை மீறுபவா்கள் மீது எவ்வித சமரசமின்றி வழக்குப் பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்யும்படி போலீஸாருக்கு உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். வாகனங்களில் போலியாக ஸ்டிக்கா் ஓட்டிக் கொண்டு வரும் நபா்களைக் கண்டறியும் வகையில், அவா்களது வாகனங்களின் ஆவணங்களை வாங்கிப் பாா்த்து ஆய்வு செய்யும்படி போலீஸாருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com