கூத்தாநல்லூர் : வெண்ணாற்றில் மண்டிக் கிடக்கும் வெங்காயத்தாமரைகள்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வெண்ணாற்றில், அகற்றப்படாமல் வெங்காயத்தாமரைச் செடிகள் குவிந்துள்ளது. 
கூத்தாநல்லூர் : வெண்ணாற்றில் மண்டிக் கிடக்கும் வெங்காயத்தாமரைகள்
கூத்தாநல்லூர் : வெண்ணாற்றில் மண்டிக் கிடக்கும் வெங்காயத்தாமரைகள்

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வெண்ணாற்றில், அகற்றப்படாமல் வெங்காயத்தாமரைச் செடிகள் குவிந்துள்ளது. 

நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் பாமணி, கோரையாறு, வெண்ணாறு என மூன்று கிளை ஆறாகப் பிரிகிறது. தொடர்ந்து, நீடாமங்கலம் ஒளிமதி வழியாக வந்து, வெண்ணவாசல் என்ற இடத்தில், வெண்ணாறு, பாண்டவையாறு எனவும், அத்திக்கடை, வாழாச்சேரி என்ற இடத்தில், மீண்டும் வெண்ணாறு, வெள்ளியாறு எனவும் இரண்டாகப் பிரிகிறது. இதில், வெண்ணாறு லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர்,  பண்டுதக்குடி , வடபாதிமங்கலம், புள்ளமங்கலம் வழியாக அரிச்சந்திரா நதியில் கலக்கிறது. 

வெண்ணாற்றிலிருந்து முதன்மை வாய்க்கால்கள் பெரியதும், சிறியதுமாகப் பிரிந்து செல்கிறது. மேலும், பல கிளை வாய்க்கால்களுமாகப் பிரிந்து பாசனத்திற்குச்  செல்லும்படியாக உள்ளது. 

இந்நிலையில், தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டபடி, ஆறுகள் தூர்வாரப்பட்டு, ஆற்றின் ஓரங்களில் வளர்ந்து இருந்த தேவையற்ற மரங்களையும், செடிகளையும் அகற்றினர். மேலும், இரண்டு பக்க கரைகளும் உயர்த்தப்பட்டுள்ளது. பாசனத்திற்கு தண்ணீர் செல்லக் கூடிய சில கிளை வாய்க்கால்களில் மட்டும் சுத்தப்படுத்தப்பட்டு, வாய்க்காலில் மண்டிக் கிடந்த கழிவுகள் அகற்றப்பட்டன. 

தொடர்ந்து, திறந்து விடப்பட்ட தண்ணீரும் ஆற்றில் கரை புரண்டு வந்து கொண்டிருக்கிறது. கூத்தாநல்லூர், பாய்க்காரப் பாலத்தின் கீழே, வெங்காயத்தாமரைச் செடிகள் மண்டிக் கிடக்கிறது. ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. வெங்காயத்தாமரைகள் அகற்றப்படாததால், ஆற்றுத் தண்ணீர் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. ஆற்றுத் தண்ணீர் தேங்கி, தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால், வெண்ணாற்றிலிருந்து ஆற்றுத் தண்ணீர் பாசனத்திற்கும் செல்ல முடியவில்லை. இதனால், ஆயிரக் கணக்கான விவசாய நிலங்களும் பாதிப்படையும் நிலையும் ஏற்பட்டுள்ளன. மேலும், ஆற்றில் குவிந்துள்ள வெங்காயத்தாமரைச்  செடிகள், காட்டாமணிகள், குப்பைகளால், பூச்சிகளும், பாம்புகளும், மாமிசக் கழிவுகளும் தேங்கியுள்ளன. 

இதனால், அப்பகுதியில், துர்நாற்றம் வீசி, தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. உடனே, நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில், கிருமி நாசினி தெளித்து, ப்ளீச்சிங்  பவுடர் தூவ வேண்டும். பொதுப்பணித் துறையினர் நேரில் பார்வையிட்டு கவனித்து, வெண்ணாற்றில் மண்டிக் குவிந்துள்ள வெங்காயத்தாமரையை அகற்ற வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com