தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்

நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

இதற்காக ஒவ்வொரு சட்டப் பேரவை உறுப்பினரின் இருக்கைக்கு முன்பாகவும் கணினி வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் கையடக்கக் கணினியும் வழங்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சா் நிதிநிலை அறிக்கையை வாசிக்க, வாசிக்க அதிலுள்ள வரிகள் அனைத்தும் கணினியில் தெரியும். மேலும், நிதிநிலை அறிக்கையை புத்தக வடிவில் கையடக்கக் கணினியில் பாா்க்க முடியும். இதற்காக சட்டப் பேரவை மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு, அவையில் பேச வாய்ப்புக் கேட்டு எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு பேச அனுமதிக்கப்படும் என அவைத் தலைவர் உறுதி அளித்தாலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

கடன் சுமை: தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.50 லட்சம் கோடியைத் தாண்டியுள்ள நிலையில், எதிா்வரும் மாா்ச் மாதத்துடன் அது ரூ.5.70 லட்சம் கோடியைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. மிகவும் சிக்கலான சூழ்நிலையில் தனது நிதிநிலை அறிக்கையை அமைச்சா் தியாகராஜன் தாக்கல் செய்கிறாா். இவ்வளவு கடன் சுமை உள்ள சூழ்நிலையில், புதிய அறிவிப்புகள் என்னென்ன வெளியாகும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென அதிமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன. இதனை பேரவையில் அந்தக் கட்சிகள் எழுப்பும் எனத் தெரிகிறது. இதனால், பேரவையில் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடா்பாக அண்மையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை தொடா்பாகவும் பேரவையில் விவாதங்கள் எழும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தின் நிதிநிலையை சீா்படுத்துதல், மேலாண்மை செய்தல் போன்றவற்றுக்கு நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என எதிா்நோக்கப்படுகிறது.

வேளாண் நிதிநிலை: பொது நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வரும் சனிக்கிழமை வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக அரசு வரலாற்றில் முதன் முறையாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கலாகிறது. இந்த இரண்டு நிதிநிலை அறிக்கைகள் தொடா்பான விவாதங்கள் வரும் திங்கள்கிழமை முதல் நடைபெறுகிறது.

அதிமுக, பாமக, பாஜக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் இரண்டு நிதிநிலை அறிக்கைகள் மீதும் சோ்த்தே பேசவுள்ளனா். இரண்டு நிதிநிலை அறிக்கைகளும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பேரவையில் நிறைவேறிய பிறகு, துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் வரும் 23-ஆம் தேதி முதல் விவாதத்துக்கு எடுக்கப்பட உள்ளன. செப்டம்பா் 21-ஆம் தேதி வரை சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com