அர்ச்சகர்கள் யாரும் நீக்கப்படவில்லை: ஸ்டாலின் விளக்கம்

தமிழகத்தில் தற்போது கோயில்களில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் யாரும் நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்படவில்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
அர்ச்சகர்கள் யாரும் நீக்கப்படவில்லை: ஸ்டாலின் விளக்கம்
அர்ச்சகர்கள் யாரும் நீக்கப்படவில்லை: ஸ்டாலின் விளக்கம்

சென்னை:  தமிழகத்தில் தற்போது கோயில்களில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் யாரும் நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்படவில்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

அர்ச்சகர் நியமனம் தொடர்பாக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது குறித்த விவாதத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில், தமிழக அறநிலையத் துறை அமைச்சர், ஒரு விளக்கத்தை இங்கே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுகுறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியோடு சொல்கிறேன். நம்மை ஆளாக்கிய நம்முடைய ஈரோட்டுச் சிங்கம், பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் அவர்களுடைய நெஞ்சிலே தைத்த முள் இது. அந்த முள்ளை எடுத்திட வேண்டுமென்பதற்காக கருணாநிதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருந்தார். ஆனால், அது நடைமுறைக்கு வரமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது அதனை நாம் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறோம்; அதற்கான பணி ஆணைகளை நாம் வழங்கியிருக்கிறோம்.

ஆனால், சிலர், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் - இங்கேகூட நம்முடைய அமைச்சர் சொல்கிறபோது, ‘ஊடகத்திலே’ என்று சொன்னார். ஊடகத் துறையினரை நான் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால், அதைப் பயன்படுத்திக் கொண்டு, சமூக வலைதளங்களில், இதை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்திலே சிலர் திட்டமிட்டு, சில காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். யாரையும், எந்தப் பணியிலிருந்தும் விடுவித்து இந்தப் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அப்படி எங்கேயாவது வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் ஆதாரத்தோடு சொல்வார்களென்று சொன்னால், அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு நிச்சயமாக எடுக்கும்.

அதிலே எந்தவிதமான சந்தேகமும்பட வேண்டிய அவசியமில்லை. ஆகவே, வேண்டுமென்றே அதைக் கொச்சைப்படுத்தி, அரசியலுக்காகவோ அல்லது சமூக நீதியைப் பாழடிக்க வேண்டுமென்ற நோக்கத்திலே சிலர் திட்டமிட்டு செய்து கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவார்கள் என்பதை மாத்திரம் நான் தங்கள் மூலமாக இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com