மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலை மோதல் விவகாரம்: திருமுல்லைவாசலில் விசைப்படகு, சுருக்குமடி வலைகள் பறிமுதல்

சீர்காழி அருகே கடந்த 14 ஆம் தேதி வானகிரி - திருமுல்லைவாசல் மீனவர்களுக்கு இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டத்தை அடுத்து திருமுல்லைவாசலில் விசைப்படகு மற்றும் சுருக்குமடி வலைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்

News image
மீனவர்கள் மோதலுக்கு காரணமான விசைப்படகு மற்றும்  தடைசெய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை பறிமுதல் செய்யும் போலீசார்.
Updated On :20 ஆகஸ்ட் 2021, 7:51 am

DIN

சீர்காழி:  சீர்காழி அருகே கடந்த 14 ஆம் தேதி வானகிரி - திருமுல்லைவாசல் மீனவர்களுக்கு இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டத்தை அடுத்து திருமுல்லைவாசலில் விசைப்படகு மற்றும் சுருக்குமடி வலைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். 

தமிழகத்தில் சுருக்கு மடி வலைக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவித்து மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் இல்லையென்றால் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு உள்ளிட்ட கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறி கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். 

Story image

பறிமுதல் செய்யப்பட்ட  சுருக்கு மடி வலை

இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர அமலாக்கப் பிரிவு போலீஸார்  தடைகளை மீறி மீன்பிடித்து வரும் படகுகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து சரியான முறையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர அமலாக்கப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என ஆத்திரமடைந்த  பூம்புகார் திருமுல்லைவாசல்  மீனவ கிராமத்தைச் சேர்ந்த  சுருக்கு மடி வலை ஆதரவு மீனவர்கள் கடந்த 14 ஆம் தேதி அன்று தங்களது விசைப்படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 

இதனை அறிந்த வானகிரி மீனவர்கள் அவர்களை தடுப்பதற்கு தங்களது பைபர் படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்றனர். தங்களை தடுக்க வருவதை பார்த்த திருமுல்லைவாசல் மீனவர்கள் பைபர் படகின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர். இதில் வானகிரி மீன கிராமத்தைச் சார்ந்த ராம்குமார், வினோத், சிலம்பரசன் உள்ளிட்ட 3 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.

மேலும் வானகிரி மீனவகிராம கிராமத்தைச் சேர்ந்த  படகு முற்றிலும் சேதம் அடைந்தது. இதனை அறிந்த வானகிரி கிராம மீனவர்கள் தங்களது கிராமம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பூம்புகார் மீனவருக்கு சொந்தமான நான்கு பைபர் படகுகளுக்கு தீ வைத்து தப்பித்துச் சென்றனர். 

Story image

பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு

இது தொடர்பாக கடலோர காவல் படையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் 4 பேரை கைது செய்தனர். 

தொடர்ந்து இரு தரப்பு மீனவ கிராமங்களிலும் விசாரணை நடைபெற்று வரும் சூழலில் படகுகள் மோதலுக்கு காரணமான விசைப்படகை பறிமுதல் செய்ய திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர்கள், பாலமுருகன், ரமேஷ் கிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் லாமேக் மற்றும் வருவாய்த்துறையினர், மீன்வளத் துறையினர் மற்றும் கடலோர காவல்படையினர் வரவழைக்கப்பட்டு. மோதலுக்கு காரணமான விசைப்படகு மற்றும்  தடைசெய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். 

சுருக்கு மடி வலைகள் மதிப்பு ரூ.30 லட்சம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.