தமிழகத்தில் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். 
காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

காரைக்குடி: தமிழகத்தில் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காணல் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் சேமிப்புக் கலன் ஒன்றை ஞாயிற்றுக் கிழமை தொடங்கி வைத்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

காணல் அறக்கட்டளை பல சமூக சேவைகளை செய்துவந்தாலும் கரோனா பேரிடர் காலத்தில் மிகப்பெரிய தேவைகளில் ஒன்றாக இருக்கிற ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்கிற வகையில் இந்த மருத்துவமனைக்கு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு திறன் கொண்ட கலனை ரூ. 52 லட்சம் செலவில் காணல் அறக்கட்டளையினர் ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மாநில சுகாதாரத்துறை சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதனை தொடங்கி வைத்து மருத்துவமனை பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற அன்று 230 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்சிஜன் தினசரி கையிருப்பு இருந்தது. ஆனால் தமிழக முதல்வரின் தீவிர நடவடிக்கையினால் ஆக்சிஜன் இருப்பு 989 கேஎல் அளவுக்கு தினசரி கையிருப்புக்கான வசதி இன்றைக்கு இருக்கிறது. அதே போன்று ஆக்சிஜன் மையங்கள் 210-க்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 47 இடங்களில் பணி நிறைவுற்று பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் தமிழக முதல்வர் வேண்டுகோளை ஏற்று 17,940 ஆக்சிஜன் செறிவூட்டிகளை தன்னார்வலர்கள் இந்த அரசுக்கு தந்திருக்கிறார்கள். இவைகள் தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவ மனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு ஆக்சிஜன் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது.

தடுப்பு ஊசிகளை பொறுத்தவரை 18 முதல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு ரூ.99 கோடியே 84 லட்சம் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் செலுத்தி 29 லட்சத்து 22 ஆயிரம் தடுப்பு ஊசிகளோடு சேர்த்து இதுவரை வந்தவை மொத்தம் 2 கோடியே 69 லட்சத்து 91 ஆயிரத்து 100 தடுப்பு ஊசிகள். அதில் செலுத்தப்பட்டிருப்பது 2 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரத்து 624. தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை இதுவரை அவர்கள் செலுத்தியிருக்கிற தடுப்பு ஊசிகள் 19 லட்சத்து 36 ஆயிரத்து 723. ஆக இதுவரை தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 80 லட்சத்து 57 ஆயிரத்து 397.

ஆனால் தமிழகத்தின் தேவையைப் பொறுத்தவரை தடுப்பூசிகள் சுமார் 12 கோடி வேண்டும். 6 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். இப்போது கையிருப்பில்  15 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. இன்னும் மூன்று நான்கு நாள்களுக்கு தடையில்லாமல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் எல்லா இடங்களிலும் நடைபெறும்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முதலில் சென்னையில் தொடங்கி வைத்துள்ளோம். மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளிலும் இந்த 24 மணி நேர தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் இது நடைமுறைக்கு வருகிறது. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் இந்த நடைமுறை  ஞாயிற்றுக்கிழமையே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று குறைந்து 1,652 என்ற அளவில் உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தையும் பார்க்க வேண்டும் என்பதால் அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. மக்கள் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக முதல்வர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். நாங்களும் எல்லா இடங்களிலும் சொல்லி வருகிறோம். நாங்கள் செல்கின்ற இடங்களில் மக்கள் முகக் கவசம் சரிவர அணிவதில்லை. ஆனால் இங்கு எல்லோரும் சரியாக முகக் கவசம் அணிந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். மாங்குடி வாழ்த்திப் பேசினார்.

முன்னதாக காணல் சமுதாய கண் மருத்துவ சேவை தலைவர் ஏ. அழகப்பன் வரவேற்றுப் பேசினார். முடிவில் காணல் அறங்காவலர், பொருளாளர் அ.மு.க. ரெங்கநாதன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com