மறுசீரமைப்பை எதிர்நோக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம்

 சுமார் ரூ.1.60 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு தொடரமைப்புக் கழகம், அதிலிருந்து மீள்வதற்கு தனியார் நிறுவனங்களுடனான நீண்ட
மறுசீரமைப்பை எதிர்நோக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம்

 சுமார் ரூ.1.60 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு தொடரமைப்புக் கழகம், அதிலிருந்து மீள்வதற்கு தனியார் நிறுவனங்களுடனான நீண்ட கால ஒப்பந்தம் மற்றும் இலவச மின்சார விநியோகம் தொடர்பாக மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய கட்டாயச் சூழல் எழுந்துள்ளது.
 தமிழகத்தின் நிதிநிலை குறித்து கடந்த ஆக.10 -ஆம் தேதி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில் 5 பொதுத்துறை நிறுவனங்களின் நிதிநிலை மோசமாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகபட்சமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ரூ.1.34 லட்சம் கோடி மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்திற்கு ரூ.25,568 கோடி என மொத்தம் ரூ.1.60 லட்சம் கோடிக்கான கடன் நிலுவையிலுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் 3.10 கோடிக்கும் கூடுதலான மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். அதில் சுமார் 90 சதவீத பயனீட்டாளர்கள் பகுதியாகவோ, முழுமையாகவோ இலவச மின்சாரத்தைப் பெற்று வருகின்றனர். நாளொன்றுக்கு தமிழகம் முழுவதும் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு சராசரியாக 12,000 மெகாவாட். இதில் அனல் மின்நிலையம், புனல் மின் நிலையம் உள்ளிட்டவற்றின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 6,000 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 7,000 மெகாவாட் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
 இழப்பைத் தவிர்க்க மறு சீரமைப்பு தேவை: கூடுதல் விலைக்கு தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதால், தமிழ்நாடு மின்வாரியத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதிலும் தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனத்திடமிருந்து மின்சாரம் வாங்கியே ஆக வேண்டும் என்ற விதிமுறையில் உடனடியாகத் திருத்தம் செய்ய வேண்டும்.
 இது ஒருபுறமிருக்க, வாக்குவங்கி அரசியலுக்காக அனைத்து வீடுகளுக்கும் தலா 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாலும், விவசாயப் பயன்பாடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதாலும் அதிக இழப்பு ஏற்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் நீங்கலாக இதர விவசாயிகள் பிரிவில், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்தவர்களே பயன்பெற்று வருகின்றனர். அதேபோல், குடிசை வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு விளக்கு மின் இணைப்புகளிலும் முறைகேடு நடப்பதாக நீண்ட காலமாகக் குறை கூறப்படுகிறது.
 இலவச மின் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட வரையறையை உருவாக்க வேண்டும். அந்த வகையில், அரசிடமிருந்து வருவாய் ஈட்டுவோருக்கான இலவச மின்சாரத்தை முதல்கட்டமாக ரத்து செய்ய வேண்டும். அதேபோல் நாளொன்றுக்கு 12 முதல் 24 மணி நேரம் வரை விவசாயப் பயன்பாடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை மறு சீரமைப்பு செய்ய வேண்டியதும் அவசியம்.
 சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டாயமாக்கப்படுமா?: மரபுசாரா எரிசக்தியினை மேம்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி, சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் சாதனத்தைக் கட்டடங்களின் மேற்கூரையில் நிறுவுவதற்கு 30 சதவீத மானியத்துடன் 1 முதல் 500 கிலோ வாட் வரை பயன்பெறலாம் என 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டம் தற்போது நடைமுறையில் இல்லை.
 தனியாரிடமிருந்து மின் கொள்முதலைக் குறைத்து, இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க 3,000 சதுரடிக்கு மேல் அமைந்துள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கு அரசுத் தரப்பில் மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
 கூடுதல் பரப்பளவில் அமைந்துள்ள வீடுகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் பட்சத்தில், மின் உற்பத்திக்கு ஒத்துழைக்க வேண்டிய கட்டாயம் தானாக உருவாகும். அதன் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சுமை கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது.
 கள ஆய்வு தேவை: இது தொடர்பாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திண்டுக்கல் கிளை செயலர் ம.உமாபதி கூறியதாவது: அரசிடமிருந்து மானியத் திட்டங்களை பெறும் பயனாளிகளின் உண்மை நிலை தெரியவில்லை என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். அந்த அடிப்படையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பயனாளிகளுக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
 தகுதியற்ற பயனாளிகள் குறித்து கள ஆய்வு செய்வதோடு, சூரியஒளி மற்றும் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com