ஒருநாள் மழைக்கு மீண்டும் மிதக்கும் சென்னை: எடப்பாடி பழனிசாமி

ஒருநாள் மழைக்கு சென்னை மீண்டும் மிதப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒருநாள் மழைக்கு மீண்டும் மிதக்கும் சென்னை: எடப்பாடி பழனிசாமி
Published on
Updated on
2 min read

ஒருநாள் மழைக்கு சென்னை மீண்டும் மிதப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒவ்வொரு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு, அம்மாவின் அரசு முன் எச்சரிக்கையாக சென்னை மாநகரத்திற்கு தனியாகவும், மாவட்ட அளவில் ஆட்சித் தலைவர்களுடனும், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, மின்சார வாரியம் உட்பட அனைத்து முக்கியமான துறைகளை பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் ஒருங்கிணைத்து, அப்போது முதலமைச்சராக மக்கள் பணியாற்றிய எனது தலைமையில், மூத்த அமைச்சர்கள் மற்றும் துறை அமைச்சர்களுடன் ஆகஸ்ட் மாதத்திலேயே குறைந்தது 5 ஆய்வுக் கூட்டங்களையாவது நடத்துவோம். தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தங்கள் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவார்கள். இது தவிர, தலைமைச் செயலாளர் பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடனும் ஆய்வு செய்வார்.
இந்த அரசு, மே மாதமே ஆட்சிப் பொறுப்பை ஏற்றும், வடகிழக்குப் பருவமழை குறித்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சரியான அறிவுரைகள் வழங்கப்படவில்லை என்றும், முக்கியமாக சென்னையில் பணிபுரிந்த அதிகாரிகளை முழுவதுமாக பணியிட மாறுதல் செய்ததன் விளைவாக, ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகளை எனது முந்தைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.
நேற்று ஒரு நாள், பிற்பகல் முதல் பெய்த கனமழையால் சென்னையில் மட்டும் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த மூவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியினை வழங்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
வடகிழக்குப் பருவமழை 20 நாட்களுக்கு முன்பு சிறிதளவு ஓய்ந்திருந்தது. அப்போதாவது பழுதடைந்த மின் உபகரணங்கள், சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைத்திருந்தால் இந்த பாதிப்புகளைத் தவிர்த்திருக்கலாம். ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருக்கும் யோசனைகளை, இந்த 8 மாதங்களில் செயல்படுத்தி இருந்தால் கூட, இந்த 3 உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்ப்பாடுகளையும் தவிர்த்திருக்கலாம்.

மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் அப்பகுதியில் உள்ள மின் வடங்களில் இருந்து மின் கசிவு ஏற்பட்டதே உயிரிழப்புகளுக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவி விலகச் சொன்ன இன்றைய முதலமைச்சர், தற்போது இந்த அரசின் மின்சாரத் துறை அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்லுவாரா?
மேலும், சென்னையில் நேற்று ஒருநாள் பெய்த கனமழையால் சாலைகளில் ஏற்கெனவே எங்கெல்லாம் மழைநீர் தேங்கியதோ, அந்த இடங்களிலேயே நேற்றும் தேங்கியது. சென்னையில் பொதுமக்கள் நேற்று வீடு திரும்ப, பெரும் அவதிக்கு உள்ளானார்கள் என்று அனைத்து ஊடகங்களும், நாளிதழ்களும் படத்துடன் செய்தியாக வெளியிட்டுள்ளன.
இந்த அரசின் முதலமைச்சர், பாதிக்கப்பட்ட இடங்களை, அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் பார்வையிடுகிறார்; முந்தைய அம்மா அரசின் மீது பழி போடுகிறார்; அதோடு அவரது பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. இனியாவது, தங்களது இயலாமையால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு எதிர்க்கட்சிகளைக் குறை கூறாமல், மக்கள் நலப் பணிகளில் உண்மையான அக்கறையுடன் &டவ;டுபட வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com