
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் மமக சார்பில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் 13ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு, மருத்துவ உபகரணங்கள் வழங்கல், கரோனா காலத்தில் பணியாற்றியவர்களையும், இரத்த தானம் செய்தவர்களையும் பாராட்டி சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவர் ஏ.கே.எம்.ஜெகபர் சாதிக் தலைமை வகித்தார். ம.ம.க.மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஏ.ஜெகபர் அலி, மருத்துவ சேவை அணி மாவட்டப் பொருளாளர் எம்.காதர் பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ம.ம.க.நகரச் செயலாளர் கே.எம்.நைனாஸ் அஹமது வரவேற்றார்.
விழாவில், ம.ம.க.மாநில விவசாய அணிச் செயலாளர் ஹெச்.எம்.டி. ரஹ்மத்துல்லாஹ், மாவட்டச் செயலாளர் ஏ. குத்புதீன், பெரியப் பள்ளிவாயில் செயலாளர் ஜமால் ஷேக் அப்துல் காதர், மேலப்பள்ளி வாயில் செயலாளர் எல்.எம்.முஹம்மது அஷ்ரப், சின்னப் பள்ளி வாயில் செயலாளர் வி.எம்.ஜெகபர்தீன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, கூத்தாநல்லூரைச் சேர்ந்த செல்வந்தர்கள் மருத்துவ உபகரணங்களை,ம.ம.க.விடம் வழங்கினர். அதன்படி, படுக்கைகள் (பெஞ்ச்), வாட்டர் பெட், ஆக்ஸிஜன் சிலிண்டர், நெடிலைசர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அனைத்து சமுதாய மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டன.
இதுகுறித்து, ரஹ்மத்துல்லாஹ் கூறியது. மருத்துவ உபகரணங்கள் அனைத்தும், மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். முன்னதாக, காலை ம.ம.க.கொடியேற்றப்பட்டு, குறைந்த கட்டணத்தில் ஆட்டோ சேவையையும் தொடங்கி வைக்கப்பட்டன.
விழாவில், ஆசிரியர் அப்துல் வஹாப், சமூக ஆர்வலர் கோஸ்.அன்வர்தீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் த.மு.மு.க. நகரச் செயலாளர் எம்.ஹெச். நிஜாமுதீன் நன்றி கூறினார்.