
விவசாயிகளின் நகைக் கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று இந்த அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.
அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே.. தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆகச் சிறந்த பேச்சாளரான தா. பாண்டியன்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், 2019-20ஆம் ஆண்டு கரோனா பெருயதொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியது. மேலும், கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில், விவசாயமும் பாதிப்புக்கு உள்ளாகியதுடன், தொடர்ந்து ஏற்பட்ட நிவர், புரெவி போன்ற புயல்களும், அதைத் தொடர்ந்து, சென்ற மாதம் பருவம் தவறிப் பெய்த கடும் மழையும், பெருத்த பயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியதால், கடன் பெற்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பெரும் அல்லலுக்கு உள்ளாகினர்.
இதையும் படிக்கலாமே.. 'சாகும்வரை பேச்சினால் மக்களைத் தட்டி எழுப்புவேன்': மதுரையில் தா.பாண்டியனின் உருக்கமான கடைசிப் பேச்சு
இப்பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காக்க அரசு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2,500 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 இலட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுத்து, தமிழ்நாட்டு மக்களை கரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து படிப்படியாக மீட்டு வருகின்றது.
இந்நிலையில், கொரோனா காலத்தில் ஏற்பட்ட குடும்ப நிதி நெருக்கடியை சமாளிக்க ஏழை, எளிய மக்கள், விவசாய தொழிலாளர்கள் கூட்டுறவு நிறுவனங்களில் தாங்கள் பெற்ற நகைக்கடனை திரும்ப செலுத்துவதில் பெரும் சிரமத்தை சயதித்து வருகின்றனர். கரோனா தொற்று ஓரளவு குறைந்துள்ள போதிலும், இயல்பான பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய குடும்பங்கள் நகைக்கடன் பெற்று அதைத் திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையை கருத்தில் கொண்டும், இதுகுறித்து பெறப்பட்ட கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்தும், பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படியும், கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினால் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்று திரும்ப செலுத்துவதில் சிரமத்திற்குள்ளான ஏழை எளிய மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக அரசு, கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகு வைத்து பெற்ற நகைக்கடன்களை தள்ளுபடி செய்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
ஏற்கனவே, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது நகைக்கடனும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகள் மூலம் வாங்கிய கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் தொடர்ந்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று நகைக்கடன் தள்ளுபடி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...