ஆட்சி மாற்றத்துக்கு நாங்க ரெடி, நீங்க ரெடியா? ஸ்டாலின்

ஒரு ஆட்சி மாற்றம் வரப்போகுது. நாங்க ரெடி, நீங்கள் ரெடியா? என்று கேள்வி எழுப்பிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நான்கு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறினார்.
ஆட்சி மாற்றத்துக்கு நாங்க ரெடி, நீங்க ரெடியா? ஸ்டாலின்
ஆட்சி மாற்றத்துக்கு நாங்க ரெடி, நீங்க ரெடியா? ஸ்டாலின்

நீடாமங்கலம்:  ஒரு ஆட்சி மாற்றம் வரப்போகுது. நாங்க ரெடி, நீங்கள் ரெடியா? என்று கேள்வி எழுப்பிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நான்கு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறினார்.

வலங்கைமான் ஒன்றியம் அவளிவநல்லூர் ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்‌‌ பேசுகையில், கடந்த மாதம் 19ம் தேதி கிராம சபைக்கூட்டங்கள் நடத்துவதாக அறிவித்தோம். டிசம்பர் 23ம் தேதியிலிருந்து 10 நாள்கள் தமிழகம் முழுவதும் நடத்த முடிவெடுத்தோம். அதனை ஏற்று அந்த பணி தொடர்ந்தது. நான் காஞ்சிபுரத்தில் நேரடியாக பங்கேற்று கிராம சபையை தொடங்கிவைத்தேன். 

கிராம சபைக் கூட்டத்தின் மூலம் பெரும் எழுச்சி எழுந்தது. இங்கு ஆண்களைவிட பெண்கள் அதிகம்  வந்துகலந்து கொண்டிருக்கிறீர்கள். இதனை பார்க்கும் போது எனக்கு நம்பிக்கை வந்துள்ளது. உங்களைச்சுற்றிலும் இங்கு நிற்பவர்கள் ஆண்கள். உங்களுக்கு பாதுகாப்பாக நிற்கிறார்கள். ஆண்களுக்கு பெண்கள் பாதுகாப்பு. பெண்களுக்கு ஆண்கள் பாதுகாப்பு.

பெண்களின் நலனுக்காக மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி பல்வேறு திட்டங்களை ‌நிறைவேற்றினார். பெண்களின் முன்னேற்றத்திற்காக தந்தை பெரியார் பாடுபட்டுள்ளார்.

1949ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை சீர்திருத்த மாநாட்டில் தந்தை பெரியார் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றினார். 1989ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது சொத்தில் பெண்களுக்கு  சம உரிமையை வழங்கினார். உள்ளாட்சியில் 33 சதவிதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினார். கர்ப்பிணிகளுக்கு உதவித்திட்டம், விதவைகளுக்கு நலத்திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்வது மிகவும் கஷ்டம். அதற்காக கடன் வாங்கும் நிலையும், சொத்தை விற்கும் நிலையிலும் தவித்த குடும்பங்கள் ஏராளம் உண்டு. இதனைக்கருத்தில் கொண்டு பெண்களுக்கு திருமண செலவிற்கு நிதியுதவிகளை கருணாநிதி செய்தார். ஆரம்ப பள்ளிகளில் கட்டாயம் பெண் ஆசிரியர்களை நியமித்து, அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவிதம் ஒதுக்கினார். 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாகத்தான் மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் தன்னம்பிக்கையோடு சுயமரியாதை உள்ளவர்களாக வாழ வேண்டும். அதற்கு அவர்கள் வாழக்கூடிய பகுதிகளில் சுயமாக தொழில் செய்ய நிதியுதவி தேவை. அதற்காக பெண்கள் பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்க மகளிர் சுய உதவிக் குழுக்களை கருணாநிதி தொடங்கினார். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நான் மாதத்திற்கு நான்கு முறையாவது பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிக் கடன் மற்றும் சுழல் நிதியை பல மணி நேரம் நின்றுக்கொண்டே அனைவருக்கும் வழங்கினேன். 

வயதுமுதிர்ந்த தாய்மார்கள் ஏன் மணிக்கணக்கில் நின்று கொடுக்கிறீர்கள் கால் வலிக்காதா என என்னிடம் கேட்பார்கள். அப்படி கேட்கக்கூடியவர்களிடம் உங்கள் முகமலர்ச்சியைப் பார்க்கும் போது கால் வலிக்காது என்பேன். இன்னும் 4 மாதம் இருக்கிறது. ஒரு ஆட்சி மாற்றம் வரப்போகுது. நாங்க ரெடி, நீங்கள் ரெடியா? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின் நான்கு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் சிலர் பேசினர். அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், எம்.ஜி.ஆர். காலத்தில் விவசாய சங்கத்தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணத்தை குறைக்கக்கோரி போராடினார்கள். ஆனால் காவலர்கள் போராட்டக்காரர்களை தாக்கினார்கள். அடுத்து ஆட்சிக்கு வந்த தலைவர்‌ கருணாநிதி விவசாயிகள் கேட்காமலே இந்தியாவிலேயே முதல்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். 

தேர்தல் அறிக்கையில் கூறியது போல முதல்வராக பதவியேற்ற உடனே 7000 கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தார். அதில் பயன் அடைந்தவர்கள் அ.தி.மு.க.வினர்தான் அதிகம். அதற்கு கருணாநிதி நான்‌ விவசாயிகளை கட்சியினராகப் பார்க்கவில்லை. தமிழக வேளாண்குடி மக்களாகத்தான் பார்ப்பதாக கூறினார். பச்சைத் துண்டுப்போட்டால் விவசாயியா? மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயம் தனியார்மயமாகும். பா‌ஜக தவிர அனைத்து மாநில முதல்வர்களும் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் போது பழனிசாமி ஆதரிக்கிறார். விவசாயிகள்‌ தான் நாட்டின் முதுகெலும்பு.

பிரதமர் மோடி பிரதமராக வருவதற்கு முன் வெளிநாட்டில் இருக்கும் கருப்புப்பணத்தை மீட்டு அனைவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றார். ஆனால் 15 பைசாக்கூட மக்களுக்கு வழங்கப்படவில்லை. திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்த தனித்துறை அமைக்கப்படும். முதியோர் உதவித்தொகை அனைவருக்கும் முறையாக வழங்கப்படும்.‌ கஜா மற்றும் நிவர் புயலின் போது விவசாயிகளுக்கு முதலில் இடைக்கால நிவாரணத்தொகையாக ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று நான்‌ கோரிக்கை வைத்தேன்‌. ஆனால் முதலமைச்சர் வழங்கவில்லை என்று கூறினார்.

கிராம சபையில் பங்கேற்ற மக்களின் கோரிக்கைகள்

வீரக்குமார்- தொடக்க வேளாண்மை வங்கியில் விவசாய கடன் வழங்கப்படவில்லை. 
கமலக்கண்ணன்: மின்சாரப் பிரச்னையை தீர்க்க துணைமின் நிலையம் அமைக்க வேண்டும். 
வினோத்: தனியார் பள்ளியில் தினக்கூலி அடிப்படையில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். 
தேன்மொழி: மூன்றாண்டுகளாக மகளிர் குழுவில் இருந்தாலும் எனக்கு வங்கிக்கடன் வழங்கப்படவில்லை. 
மனோகரன் (சிறுவிவசாயி): பத்தாண்டுகளாக ஆற்றுச்சாகுபடி செய்து வருகிறோம்.‌ அந்த ஆற்றை தூர்வாரிக்கொடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம்‌ வாங்குகிறார்கள். 
சுதா: முதியோர் ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படவில்லை. 
முருகேசன்: சிறுவிவசாயி, எட்டுவாய்காலில் சரியாக பராமரிக்காமல் இருப்பதால் விவசாயத்திற்கு நீர் கிடைப்பதில்லை. 
பால்ராஜ்: ரேசன் கடையில் தரமற்ற குண்டு அரசி வழங்கப்படுகிறது. பருப்பு சக்கரை ஆகியவை ஒரே நேரத்தில் வழங்க வேண்டும். வீடற்ற தலித் மக்களுக்கு வீடுகட்டித்தர வேண்டும்.என்பன போன்ற கோரிக்கைளை தெரிவித்தனர். 

பின்னர் கிராம மக்களின் ஒருமித்த ஆதரவோடு அதிமுகவை நிராகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார். கிராமசபைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ம.சுப்பிரமணியன், உ.மதிவாணன், டி.ஆர்.பி.ராஜா, ப.ஆடலரசன், மாவட்ட செயலாளர்கள் திருவாரூர் பூண்டிகே.கலைவாணன், தஞ்சாவூர் கல்யாண சுந்தரம், துரைசந்திரசேகரன், நாகை நிவேதா முருகன், நீடாமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் வலங்கைமான் (மேற்கு) அன்பரசன், (கிழக்கு)தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருவாரூர் மாவட்டம் சார்பாக மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com