
அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்கள் 905 பேருடன் திமுகவில் இணைந்தார்.
நிகழ்வில் பேசிய தோப்பு வெங்கடாசலம், தமிழகத்தில் இன்று மாபெரும் சக்தியாக திமுக திகழ்ந்து கொண்டிருந்தாலும் கொங்கு மண்டலத்தில் போதிய வெற்றி கிடைக்கவில்லை என்ற திமுக தலைவர் ஸ்டாலினின் ஆதங்கத்தை போக்கவே நாங்கள் இங்கு இணைந்திருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் 100% வெற்றி பெற நாங்கள் உழைப்போம் என்று உறுதி கூறுகிறோம்.
அரசை முதல்வர் ஸ்டாலின் அற்புதமாக வழிநடத்தி செல்கிறார். முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கைகள் எங்களை ஈர்த்தது. இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக ஆட்சி செய்கிறார். மற்ற மாநில முதல்வர்களும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் திட்டங்களை முன்மாதிரியாக எடுத்து வருகின்றனர். இன்று அவருடன் அவர் அருகில் நிற்பது பெருமையாக இருக்கிறது.
இன்னும் ஒரு மாதம் அவகாசம் கொடுத்தால் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 25,000 தொண்டர்களை திமுகவில் இணையச் செய்வேன் என்று கூறி, தனக்கு கட்சியில் இணைய வாய்ப்பளித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தோப்பு வெங்கடாசலம், தான் எந்த பதவியையும் பொறுப்பையும் எதிர்பார்த்து திமுகவிற்கு வரவில்லை என்று கூறியதுடன், அதிமுக, அமமுகவினரைப் பற்றி பேச விரும்பவில்லை என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...