ஆண்டு முழுவதும் குறைந்த விலைக்கு முட்டை: விளம்பரத்தின் பகீர் பின்னணி

ஒரே ஒரு முறை பணம் செலுத்தினால் போதும், நீங்கள் செலுத்தும் பணத்துக்கு ஏற்ப ஆண்டு முழுவதும் குறைந்த விலைக்கு முட்டை வழங்கப்படும் என்று
ஆண்டு முழுவதும் குறைந்த விலைக்கு முட்டை: விளம்பரத்தின் பகீர் பின்னணி
ஆண்டு முழுவதும் குறைந்த விலைக்கு முட்டை: விளம்பரத்தின் பகீர் பின்னணி

ஒரே ஒரு முறை பணம் செலுத்தினால் போதும், நீங்கள் செலுத்தும் பணத்துக்கு ஏற்ப ஆண்டு முழுவதும் குறைந்த விலைக்கு முட்டை வழங்கப்படும் என்று கடந்த வாரத்தில் ரஃபோல் ரீடெய்ல் தனியார் முட்டை நிறுவனத்தின் பெயரில் நாளிதழ்களில் வெளியான முட்டை விளம்பரத்தை பலரும் பார்த்திருப்பார்கள்.

அந்த விளம்பரத்தில் ஆண்டு முழுவதும் ஒரே விலைக்கு அதாவது ரூ.2.24 காசுகளுக்கு முட்டை வழங்கப்படும் என்றும் 700 செலுத்தினால் வாரம் 6 முட்டைகள், ரூ.1400 செலுத்தினால் வாரம் 12 முட்டைகள், ரூ.2800 செலுத்தினால் 24 முட்டைகள் வீட்டு முகவரிக்கே ஆண்டு முழுவதும் அனுப்பி வைக்கப்படும் என்று விளம்பரம் கொடுக்கப்பட்டது.

இந்த விளம்பரத்தைப் பார்த்த பொதுமக்கள் பலரும்.. ஆஹா ஆண்டு முழுவதும் ஒரே விலை அதுவும் குறைந்த விலையில் முட்டை கிடைக்கிறதே, ஒரே ஒரு முறை பணம் செலுத்தினால் போதுமே என நினைத்து, விளம்பரத்தில் இருந்த வங்கிக் கணக்குக்கு பணத்தை செலுத்தினர். 

இந்த விளம்பரம் அன்றைய தினம் பேசுபொருளாகவும் மாறியது. இது எப்படி சாத்தியம் என்று ஒரு சாராரும், சாத்தியம் இருப்பதால்தானே, இப்படி பகிரங்கமாக விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று மற்றொரு சாராரும் வாதங்களை முன் வைத்தனர். 

இந்த விளம்பரத்தின் பின்னணி என்ன? யார் இருக்கிறார்கள் என்பது குறித்து அறிந்து கொள்ள, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கினர். நிறுவனத்தின் உரிமையாளருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

சம்மனை அடுத்து அரக்கோணத்தைச் சேர்ந்த சிவம் நரேந்திரன் என்பவர் கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்த தகவல்கள் இவை..

இவர்களது நிறுவனம் சென்னை திருமுல்லைவாயிலில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு முறையாக உரிமம் எதுவும் பெறப்படவில்லை.

இந்த விளம்பரத்தைப் பார்த்து அன்றைய தினம் தமிழகம் முழுவதும் சுமார் 310 பேர் அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு பணம் செலுத்தியுள்ளனர்.இவ்வாறு இவர்கள் அனுப்பிய பணம் ரூ.4.5 லட்சமாகும்.

இந்த பணத்தைப் பெற்றுக் கொண்டதற்கான எந்த ரசீதும், பணம் செலுத்தியவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக நிறுவனத்தின் மீது நடவடிக்கையைத் தொடங்கிய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், முதலில், அந்த நிறுவனத்தின் இணையதளத்தை முடக்கினர். பிறகு, அந்த வங்கிக் கணக்குக்கு யாரெல்லாம் பணம் அனுப்பினார்களோ, அவர்களது வங்கிக் கணக்குக்கே மீண்டும் அவர்கள் அனுப்பிய தொகையை அனுப்பி வைத்தனர். வங்கிக் கணக்கையும் முடக்கினர்.

கடைசியாக குறைந்த விலையில் பொருள்களை வழங்குவதாக வரும் விளம்பரங்களைப் பார்த்து மக்கள் ஏமாந்து விட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்ல.. குறைந்த விலைக்கு முட்டை விற்பதாக விளம்பரப்படுத்தும் தனியாா் முட்டை நிறுவனங்களை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கமும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. 

இதுகுறித்து அச் சங்கத்தின் தலைவா் சிங்கராஜ் கூறுகையில், அண்மையில் வெளியான விளம்பரம் ஒன்றில் ஒரு முட்டை ரூ. 2.24-க்கு விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியானது. இது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று. முட்டை உற்பத்தி செலவே ரூ. 4.80-ஆகிறது. ஏனென்றால் கோழிகளுக்கான மூலப்பொருள்களின் விலை தொடா்ச்சியாக உயா்ந்து வருகிறது. மக்காச்சோளம் மாா்ச் மாதம் கிலோ ரூ.18 ஆக இருந்தது தற்போது ரூ. 22-ஆக உயா்ந்துள்ளது. சோயா கிலோ ரூ. 85-ஆகவும், சூரியகாந்தி கிலோ ரூ. 48-ஆக உயா்ந்துள்ளது. மேலும், மருந்து பொருள்களின் விலையும் உயா்ந்து வருகிறது.

இந்த நிலையில் குறைந்த விலைக்கு முட்டை விற்பனை செய்வது சாத்தியமற்றது. அதிலும் வீடு வீடாகச் சென்று வழங்குவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முன் பணம் எதுவும் வாங்காமல் முட்டை விற்பனை செய்தால் பாராட்டலாம். ஆனால், முன்பணம் வாங்கிக் கொண்டு முட்டைகளை விற்பனை செய்வதை ஏற்க முடியாது. அதுமட்டுமின்றி முட்டை வியாபாரிகள் ரூ. 2.24-க்கு முட்டைகளை வாங்கி ரூ. 5-வரை விற்க வாய்ப்புள்ளது.

சத்துணவுக்கே ரூ. 4.85-க்கு தான் முட்டைகளை அரசு கொள்முதல் செய்கிறது. கிராமப்புறங்களில் ஈமு கோழி வாங்கி ஏமாற்றமடைந்தது போல முட்டை விற்பனையில் யாரும் ஏமாற்றமடையக் கூடாது.

முட்டைகளை குளிா்பதனக் கிடங்குகளில் 3 மாதங்களுக்கு மேல் வைக்க முடியாது. அதனால் சேமித்து வைத்து விற்பனை செய்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளனர்.

எனவே, விலை குறைவு என்று வெளியாகும் எந்த விளம்பரத்தைப் பார்த்தாலும் உடனே அது உண்மை என்று நம்பி பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதை மக்கள் நிறுத்த வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com