அவர் எங்கள் துரைமுருகனே அல்ல: நீதிமன்றத்தில் அதிர்ச்சி கொடுத்த திமுக

வேலூர் மக்களவைத் தேர்தலின் போது கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதில் தொடர்புடைய கதிர் ஆனந்தின் தந்தை துரைமுருகனும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனும் ஒருவர் அல்ல என்று யாராவது கூற முடியுமா?
அவர் எங்கள் துரைமுருகனே அல்ல: நீதிமன்றத்தில் அதிர்ச்சி கொடுத்த திமுக
அவர் எங்கள் துரைமுருகனே அல்ல: நீதிமன்றத்தில் அதிர்ச்சி கொடுத்த திமுக


சென்னை: வேலூர் மக்களவைத் தேர்தலின் போது கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதில் தொடர்புடைய கதிர் ஆனந்தின் தந்தை துரைமுருகனும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனும் ஒருவர் அல்ல என்று யாராவது கூற முடியுமா?

அந்த துரைமுருகன், திமுகவின் நிரந்தர பொருளாளர் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா? சொல்வது என்ன ரிட் மனுவுடன் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமே  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுவும் துரைமுருகன் சார்ந்திருக்கும் திமுக கட்சி சார்பிலேயே.

வேலூர் மக்களவைத் தேர்தலின்போது கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, கடந்த ஜனவரி 28-ஆம் தேதி திமுக சார்பில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி இந்த ரிட் மனுவை தாக்கல் செய்தார். அதில், டி. துரைமுருகன் என்பவர், அதாவது வேலூரில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கதிர் ஆனந்தின் தந்தையும், திமுக பொதுச் செயலாளர் மற்றும் நிரந்தர பொருளாளரான துரைமுருகனும் ஒரே நபர் அல்ல.

இவ்வாறு திமுக சார்பில் கூறுவதற்குக் காரணம், சோதனை செய்யப்பட்டது அதிகாரப்பூர்வமான சான்றுகளின்படி, டி. துரைமுருகனுக்குச் சொந்தமான இடங்களில், ஆனால், திமுக பொருளாளர் பெயர் துரைமுருகன்தான். டி. என்ற எழுத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரிட் மனு மீது, திமுக செயலாளர் கே. பொன்முடி பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்துள்ளார்.

அந்த பிரமாணப் பத்திரத்திலும் கே. பொன்முடி தரப்பில், இதையேதான் கூறியிருந்தார். அதாவது, அந்த டி. துரைமுருகனும், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனும் ஒருவர் அல்ல என்பதே.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணயின் போது திமுகவின் இந்த நிலைப்பாட்டால், அதிர்ந்துபோன வருமான வரித்துறையினர், அந்த துரைமுருகனும், இந்த டி. துரைமுருகனும் ஒருவரே என்று நிரூபிக்க ஒரு ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய பரிதாபமான நிலை ஏற்பட்டது.

ஆனால், அது அவ்வளவு ஒன்றும் கடினமான வேலையாக இருந்திருக்கவில்லை. அதாவது, 2005-ஆம் ஆண்டு காட்பாடியில் ஒரு வேளாண் விளைநிலத்தை டி. துரைமுருகன் பத்திரப்பதிவு செய்தபோது, தாசில்தார் கையெழுத்திட்டு அளித்த பட்டா சான்றிதழில், டி. துரைமுருகன் என்று பெயரிட்டு, அதோடு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் புகைப்படமும் ஒட்டப்பட்டிருந்தது.

அந்த பட்டா சான்றிதழில் டி. துரைமுருகன் என்று பெயரிடப்பட்டு, அதில் துரைமுருகன் புகைப்படமே ஒட்டப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, வேலூரில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் குறிப்பிடப்படும் அந்த டி. துரைமுருகனும், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனும் ஒருவரே என்று வருமான வரித்துறையினர் வாதிட்டனர்.

மேலும், இந்த ஆதாரத்தின் மூலம், துரைமுருகனும், டி. துரைமுருகனும், அதாவது 'டி'  இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது ஒரு நபர்தான் என்றும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் வருமான வரித் துறை தெரிவித்திருந்தது.

ஆனால், நீதிமன்றத்தில் புதிதாக ஆதாரங்களைச் சமர்ப்பிக்க திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பை உயர் நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார்.

வேலூரில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையில் சிக்கிய துரைமுருகனும், திமுக பொருளாளர் துரைமுருகனும் வேறு வேறு என்று திமுகவே, அதுவும் கட்சியின் பொருளாளர் மற்றும் பொதுச் செயலாளரையே தங்கள் தலைவர் இல்லை என்று கூறுவதற்குக் காரணமாகக் கூறப்படுவது என்னவென்றால்,

துரைமுருகன் திமுவின் பொருளாளராக இருப்பதால் இந்த வழக்கில், அவரது பெயர் இருந்தால், அவர் பதவி வகிக்கும் திமுக அறக்கட்டளையின் கணக்குகளும் இந்த வழக்குடன் இணைக்கப்பட்டுவிடும் என்பதால்தான் என்கிறது தகவலறிந்த வட்டாரங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com