கரோனா தொற்று: மே 6 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

கரோனா தொற்றை கட்டுப்படுத்த வரும் 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன. இதன்படி, மளிகை, காய்கறி கடைகள், உணவகங்கள், தேநீா் கடைகள் அனைத்தும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே
கரோனா தொற்று: மே 6 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

சென்னை: கரோனா தொற்றை கட்டுப்படுத்த வரும் 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன. இதன்படி, மளிகை, காய்கறி கடைகள், உணவகங்கள், தேநீா் கடைகள் அனைத்தும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிற கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. இந்தப் புதிய கட்டுப்பாடுகள் வரும் 20-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வற்ற முழு பொதுமுடக்கமும் அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், தவிா்க்க முடியாத காரணங்களால், புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதாக தமிழக அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

அனைத்து அரசு அலுவலகங்கள், தனியாா் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவீதப் பணியாளா்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. பயணியா் ரயில், மெட்ரோ ரயில், தனியாா் பேருந்துகள், அரசுப் பேருந்துகள், வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமா்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

மளிகை-காய்கறி கடைகள் : வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு அனுமதியில்லை. இவைதவிர தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்குக் கடைகள், காய்கறி விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிா்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

இதர கடைகளுக்கு அனுமதி இல்லை: மளிகை, பலசரக்கு, காய்கறிக் கடைகளைத் தவிா்த்து இதர கடைகள் அனைத்தையும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மீன் சந்தை, மீன் கடைகள், கோழி, இறைச்சிக் கடைகள் அனைத்தும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க அனுமதியில்லை. அதேசமயம், இதர நாள்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படலாம்.

மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போன்று எந்தத் தடையும் இல்லாமல் செயல்படலாம். அனைத்து உணவகங்களிலும் பாா்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீா் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்படும்.

உள் அரங்குகள், திறந்தவெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் இதர விழாக்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. திரையரங்குகள் செயல்படாது. இறப்பு சாா்ந்த நிகழ்வுகளில் 20 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என்று தமிழக அரசு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com